அமெரிக்க கடற்படை தலைமையில் நடக்கும் 'சீகேட்' என்ற கடற்படை பயிற்சியில் இதர 20 நாடுகளுடன் சிங்கப்பூர் குடியரசு கடற்படையும் கலந்துகொண்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் கடற்கொள்ளை, கடல் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான வட்டார ஆற்றலை பெருக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தப் பயிற்சி இடம்பெறுகிறது. சீகேட் 10 நாள் பயிற்சி இன்றுடன் முடிவடைகிறது. மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளிலும் தென்சீனக் கடலிலும் கப்பலில் பலரும் ஏறுவது போன்ற பாவனைப் பயிற்சிகள் அதில் உள்ளடங்கும்.
கடந்த 2002ல் தொடங்கிய அந்தப் பயிற்சி இத்துடன் 20வது ஆண்டாக நடக்கிறது. இந்த ஆண்டு பயிற்சியில் மூன்று நாள் கடற்துறை பாதுகாப்பு இணைய கருத்தரங்கம் இடம்பெறுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் கடல் துறை பாதுகாப்பு மிரட்டல்களைக் கையாளுவதற்கான தலைசிறந்த யோசனைகளையும் நடைமுறைகளையும் அந்தக் கருத்தரங்கில் பல வல்லுநர்களும் விவாதிப்பார்கள், பகிர்ந்துகொள்கிறார்கள்.
இதனிடையே, இந்தப் பயிற்சி பற்றி தற்காப்பு அமைச்சு நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த முயற்சிகள் எல்லாம் இந்த வட்டாரத்தில் கடல்துறை பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் மிரட்டல்களை சமாளிப்பதில் இடம்பெறக்கூடிய ஒன்றிணைந்த முயற்சிகளைப் பலப் படுத்த உதவும் என்றது அமைச்சு.
இப்பயிற்சி படிப்படியாக வலுப் பெற்றுள்ளது என்று சிங்கப்பூர் கடற்படையின் தகவல் பகிர்வு நிலையத்தின் தலைவரான எல்டிசி லெஸ்டர் யோங் கூறினார்.
இந்த ஆண்டு கொவிட்-19 காரணமாக பல்வேறு சவால்கள் இருந்தாலும் தகவல் பகிர்வு நடைமுறைகளைத் தொடர்ந்து தாங்கள் பரிசோதித்து பார்ப்பதாகவும் கடலில் செயலாற்றலை இந்தப் பயிற்சியின் மூலம் மேம்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

