செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
dd5e1ec7-7bbc-466b-85df-26e261e0720f
-

மசெக: மக்களுடனான சந்திப்புகள் திங்கட்கிழமை முதல் தொடங்கும்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொகுதி மக்களை நேரடியாகச் சந்திப்பதை மீண்டும் மக்கள் செயல் கட்சி (மசெக) வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது. பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் மீண்டும் சந்திப்புகளும் நடவடிக்கைகளும் தொடங்கும் என்று நேற்று முன்தினம் கட்சி அறிவித்தது. சமூகத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்த வேளையில் மக்களை நேரடியாகச் சந்திப்பதை நிறுத்திவைக்குமாறு மே மாதத்தில் மசெக அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் குழுக்கள் மும்மடங்காகின

நடமாட முடியாத நிலையில் தங்களின் தடுப்பூசிக்காக வீட்டிலேயே காத்திருக்கும் மூத்தோருக்கு இனி மேலும் விரைவாகத் தடுப்பூசி கிட்டும். இவ்வாறு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் குழுக்களின் எண்ணிக்கை 11லிருந்து 33 ஆக அதிகரித்து உள்ளது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ள முதியவர்களுக்குத் தடுப்பூசி போட முன்வருமாறு இம்மாதம் 6ஆம் தேதியன்று திரு ஓங், ஃபேஸ்புக் பதிவு வழி அழைப்பு விடுத்தார். இச்சேவையை அதிகமானோர் நாடுவதாகவும் அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்குக் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் ஆகின்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து கிட்டத்தட்ட 200 மருத்துவர்கள், தாதியர் முன்வந்து தடுப்பூசி போட உதவியுள்ளதாக அமைச்சர் ஓங் பகிர்ந்துகொண்டார்.