நிலவனப்புத் தொழிலாளர்களுக்கு 6.3% வருடாந்திர சம்பள உயர்வு

நிலவனப்புத் தொழிலாளர்களுக்கு 6.3% வருடாந்திர சம்பள உயர்வு

2 mins read
80417af1-e4c8-49bf-aae8-da5a92db0e25
கரையோரப் பூந்தோட்டத்தில் நேற்று மின்சாரத் துப்புரவு வாகனங்களை என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் சீ ஹொங் டாட் (சிவப்பு சட்டையில்) மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (இடது) ஓட்டிப் பார்த்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நில­வ­னப்­பைப் பரா­ம­ரிக்­கும் தொழி­லா­ளர்­க­ளின் குறைந்­த­பட்ச அடிப்­படைச் சம்­ப­ளம், ஆண்­டுக்கு 6.3% அதி­க­ரிக்­க­வுள்­ளது. இந்த அதி­கரிப்பு ஆறு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும். நில­வ­னப்­புத் தொழில்­து­றை­யின் சம்­பள உயர்வு முறை தொடர்­பான முத்­த­ரப்­புக் குழு­வின் பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் நேற்று ஏற்­றுக்­கொண்­டது.

சம்­பள அதி­க­ரிப்பு 2023ஆம் ஆண்டு ஜூலை 1 தொடங்கி ஆறு ஆண்­டு­கள் நீடிக்­கும். இத­னால் 358 நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர் மற்­றும் நிரந்­த­ர­வாசி தொழி­லா­ளர்­கள் பல­ன­டை­வர்.

வெவ்­வேறு திறன் நிலை­களைக் கொண்ட ஊழி­யர்­க­ளுக்­குக் குறைந்­த­பட்ச சம்­ப­ளம் குறித்­தும் பயிற்­சித் தேவை­கள் குறித்­தும் வரை­ய­றுப்­பதே படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை. ஒரு துறை­யில் உள்ள ஊழி­யர்­க­ளது திறன்­கள், உற்­பத்­தித்­தி­றன், வேலைப் பொறுப்­பு­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப அவர்­க­ளின் சம்­ப­ளம் உயர்­வதை உறு­தி­செய்ய இத்­திட்­டம் உத­வு­கிறது.

அர­சாங்­கம், சங்­கங்­கள், நில­வனப்­புப் பரா­ம­ரிப்­புச் சேவை வழங்­கு­நர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் ஆகிய பிர­தி­நி­தி­க­ளைக் கொண்ட நில­வ­னப்­புத் தொழில்­து­றைக்­கான முத்­த­ரப்­புக் குழு­மம் (டிசி­எல்), மறு­ஆய்வு செய்­ததை அடுத்து இப்­பரிந்­து­ரை­க­ளைச் செய்­துள்­ளது.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தில் நேற்று நில­வ­னப்­புத் தொழி­லா­ளர்­களது பணி­க­ளைப் பார்­வை­யிட்ட மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது பின்­னர் சம்­பள அதி­க­ரிப்பு குறித்­தும் பேசி­னார்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை நடை­மு­றைப்­ப­டுத்­திய வேறு தொழில்­து­றை­களில் சம்­பள உயர்வு இருந்த பட்­சத்­தில் உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யும் அதி­க­ரித்­த­தென அவர் குறிப்­பிட்­டார். வேலை முன்­னேற்­றம், வாய்ப்­பு­கள் இரண்­டை­யும் அறிந்து ஊழி­யர்­கள் அத்­தொ­ழில்­து­றை­களில் வந்து சேர்ந்­த­தாக அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, முத்­த­ரப்­புக் குழு பரிந்­துரை செய்­தி­ருந்த இரு புதிய வேலை பொறுப்­பு­களும் 2023 முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். நில­வ­னப்பு நிபு­ணர் மற்­றும் மூத்த நில­வ­னப்பு நிபு­ணர் ஆகி­ய­வையே அந்த இரு புதிய பொறுப்­பு­கள்.

நில­வ­னப்பு தொடர்­பான அனைத்து வேலை­க­ளுக்­கும் கட்­டாய பயிற்­சித் தேவை­களை மேம்­படுத்த வேண்­டும் என்ற மூன்­றாவது பரிந்­து­ரை­யை­யும் அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இது 2023ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.