தினமும் அறிவிக்கப்பட்டு வந்த புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையை முன்னதாகவே மற்றவர்களுக்குத் தெரிவித்த 36 வயது தாங் லின் என்பவருக்கு நேற்று $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பலமுறை தாங் லின் ரகசியத்தன்மையைக் காக்கத் தவறியதாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளை தாங் லின் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. தினமும் பதிவான புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சின் தரவு நிர்வாகப் பிரிவில் துணைத் தலைவராக இருந்த ஸாவ் ஸெங் என்பவரிடமிருந்து தாங் லின்னுக்குத் தகவல் கிடைத்தது. அதை அவர் வங்கியில் பணிபுரிந்த தன் வேலை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
ஒரு கொவிட்-19 சம்பவம் குறித்து ஸாவ்விடம் தாங் லின் கூடுதல் விவரம் கேட்டதாகவும் அறியப்படுகிறது.

