கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காக எட்டு உணவகங்களுக்கு மூடச் சொல்லி உத்தரவு இடப்பட்டது.
அத்துடன் 59 நபர்களுக்கும் 22 உணவகங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
பல்வேறு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக 10 முதல் 20 நாட்களுக்கு மூடுமாறு அந்த எட்டு உணவகங்களுக்கும் உத்தரவு இடப்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துதல், குழுக்களாக அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்யாதிருத்தல் போன்ற விதிமீறல்கள் நடந்திருந்தன.
அபராதம் விதிக்கப்பட்ட 22 உணவகங்கள், தலா $1,000 முதல் $4,000 வரை செலுத்த நேரிட்டது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோருடன் கூடியதற்காக அல்லது உணவருந்தாதபோது முகக்கவசத்தை அணியத் தவறியதற்காக அந்த 59 பேருக்கும் ஆளுக்குத் தலா $300 முதல் $1,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
தடுப்பூசி தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, பல்வேறு அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த பாதுகாப்பு இடைவெளிக்கான அமலாக்க அதிகாரிகள் சோதனைகள் நடத்தியதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று தம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
இச்சோதனைகள் கடந்த வாரஇறுதி நாட்களில் 700க்கும் மேற்பட்ட உணவகங்களிலும் 2,000க்கும் மேற்பட்டோர் மீதும் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறைந்தது ஐந்து உணவுக்கடைகள், வாடிக்கையாளர்களின் தடுப்பூசி தகுதியைச் சரிபார்க்கத் தவறி அவர்களை உணவகத்தினுள் அனுமதித்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு ஒன்பது வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

