அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய பயணத்தின் முக்கிய விவகாரங்கள் இடம்பெறும்
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூருக்கும் சக ஆசியான் நாடான வியட்னாமுக்கும் மேற்கொள்ளும் பயணங்களின்போது, இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் நீடித்து நிலைத்திருக்கும் கடப்பாட்டை மறு உறுதிப்படுத்துவார் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
"இந்த வட்டாரம், குறிப்பாக, தென்கிழக்காசிய விவகாரங்கள் அமெரிக்காவுக்கு முக்கியமானவை," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் செய்தியாளர் கூட்டத்தின்போது கூறினார்.
"21ஆம் நூற்றாண்டு வரலாற்றின் பெரும்பகுதி இந்தோ-பசிபிக் வட்டாரத்தைப் பற்றியதாகவே இருக்கும் என்று துணை அதிபர் புரிந்து வைத்துள்ளார்.
"இந்த வட்டாரத்தில் அமெரிக்காவுக்கு நீடித்த ஆர்வங்கள் உள்ளன. அதனால்தான், அவர் இந்த வட்டாரத்தில் கவனம் செலுத்தி, இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்," என்றும் அந்த அதிகாரி விவரித்தார்.
இவ்வாண்டு ஜனவரியில் பதவி ஏற்ற திருவாட்டி கமலா, அமெரிக்க துணை அதிபர் என்ற முறையில் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம். வியட்னாமுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அந்நாட்டின் ஆக உயர் அதிகாரி ஒருவர் இவ்வட்டாரத்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் கடந்த மாதம் சிங்கப்பூர், வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பிறகு திருவாட்டி கமலாவின் பயணம் இடம்பெறுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட அந்த அதிகாரி, "உலகெங்கும் அமெரிக்காவின் கூட்டணியையும் பங்காளித்துவத்தையும் மீண்டும் பலப்படுத்துவதே பைடன் நிர்வாகம் முக்கிய கவனம் செலுத்தும். அதற்கு அந்தந்த வட்டாரத்துக்கு நேரடியாகச் சென்று, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, திருவாட்டி கமலா விரும்புகிறார்.
"துணை அதிபரின் பயணத்தில் உலகளாவிய பொதுச் சுகாதாரம், பொருளியல் பங்காளித்துவம், பாதுகாப்பு ஆகியவை முக்கிய இடம்பெறும்," என்று மேலும் கூறினார்.
"இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவுக்கும் ஒரு நிலையான முக்கிய பங்கு உள்ளது என்பதை யும் இந்த வட்டாரத்தில் ஒரு திறந்த வர்த்தகத்தைக் கட்டிக்காக்க பைடன் நிர்வாகம் விரும்புகிறது என்பதையும் துணை அதிபரின் பயணம் வலியுறுத்தும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபர், மூன்று நாள் வருகை மேற்கொண்டு நாளை சிங்கப்பூர் வந்து சேர்வார். அவருடன் துணை அதிபர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம், அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் வருகிறார்கள்.
திங்கட்கிழமை திருவாட்டி கமலா, முதலில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்திப்பார்.
பின்னர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்து, சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பார். பின்னர் இரு தலைவர்கள் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இஸ்தானாவில் நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, திருமதி கமலா ஹாரிஸின் பெயரில் ஒரு புதிய ஆர்க்கிட் மலர் வெளியிடப்படும்.
திங்கட்கிழமை பிற்பகலில் துணை அதிபர், சாங்கி கடற்படைத் தளத்துக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'யுஎஸ்எஸ் துல்சா' எனும் அமெரிக்க போர்க் கப்பலில் பணிபுரியும் வீரர்களுடன் உரையாடுவார்.
"சாங்கி கடற்படைத் தளத்துக்கு திருவாட்டி கமலா வருவது, சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவை வலியுறுத்துவதாக இருக்கும்.
"சிங்கப்பூருடன் நாங்கள் கொண்டிருக்கும் பங்காளித்துவம் தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் வலுவான பாதுகாப்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது," என்றும் மற்றோர் அமெரிக்க அதிகாரி சென்னார்.
செவ்வாய்க்கிழமை காலையில் தாம் ஆற்றும் கொள்கை உரையில் துணை அதிபர், தென்கிழக்காசியாவிலும் இந்தோ-பசிபிக் வட்டாரத்திலும் அமெரிக்கப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்படும்.
அதன் பின்னர், திருவாட்டி கமலா பங்கேற்கும் வட்டமேசை கலந்துரையாடலில் வர்த்தக சமூகத்துடன் சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் கலந்துகொள்வார்.
சிங்கப்பூரில் இறுதி நிகழ்வாக துணை அதிபர் சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊழியர்களைச் சந்தித்து உரையாடுவார். பின்னர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை ஹனோய் சென்று சேர்வார்.
துணை அதிபருக்கும்
கொவிட்-19 பரிசோதனை
நாளை சிங்கப்பூருக்கு வரும் 56 வயது அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வார் என்றும் அவரது கட்டுப்படுத்தப்பட்ட சிங்கப்பூர் பயணம் பாதுகாப்பாக அமைய, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிருமித்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்க்கும் வகையில் துணை அதிபர் குழுவின் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது என்று திரு ஓங் விவரித்தார்.

