அடுத்த மாதத்திலிருந்து 25 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையை மூன்று மின்னிலக்கத் தளத்தின் கீழ் இணையம் வழி கற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இம்மூன்று தளங்களின் சந்தா திட்டங்களின் வழியே, தகுதி பெறுவோர் சிறிய அளவிலான 80,300 பயிற்சிகளைப் பெறலாம்.
என்டியூசி லெர்னிங்ஹப்,க்னோபி, சில்லெர்னன் ஆகிய மூன்று அமைப்புகள் ஈடுபட்டுள்ள இந்த ஈராண்டு முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதி இது என சிங்கப்பூர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பும் அதன் பங்காளித்துவ அமைப்பு களும் இணைந்து நேற்று அறிக்கை வெளியிட்டன.
என்டியூசி லெர்னிங்ஹப் மற்றும் க்னோபியுடைய தளங்கள் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து சில்லெர்ன்அமைப்பின் தளம் டிசம்பர் மாதம் அறிமுகம் காணும்.
ஊடகங்களிடம் பேசிய மனிதவள, கல்வி துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், இது மக்கள் தங்களுக்குத் தகுந்த வேகத்தில் புதுத் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் எனக் கூறினார்.
கொவிட்-19 நோய்த்தொற்று இணையம் வழி கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இணையம் வழி கற்றல் பயனுள்ள ஒன்றென்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் வாழ்நாள் கற்றலை மக்களிடையே வலியுறுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதி என்றும் தரமான துறை சார்ந்த பயிற்சிகளை மக்களிடத்தில் இது கொண்டு சேர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வாக்கில், 725,000 பேர் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் நிதி உதவியைப் பயன் படுத்திக்கொண்டுள்ளனர். இத் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அதில் 95 விழுக்காட்டுப் பயிற்சிகள், நிபுணத்துவ திறன் மேம்பாடு அல்லது மறுதிறன் பயிற்சி ஆகியவை பற்றியது.
7,000க்கு மேற்பட்ட முதலாளிகள் தங்கள் ஊழியர்களை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் திருவாட்டி கான் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு ஜூலை மாதத்தில் தொடங்கிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதத்தில் 100,000க்கு மேற்பட்டோர் பங்குபெற்று பலதரப்பட்ட திறன்களைக் கற்றுக்கொண்டும் வேலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் உள்ளனர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதத்தின் நிறைவு சாலைக்காட்சி நாளையுடன் முடிவடைகிறது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி பற்றியும் அதன் நிதி பற்றியும் மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையத் தளத்தை நாடலாம்.

