பலதரப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ளவும் பரஸ்பரப் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளவும் முதிர்ச்சியான கண்ணோட்டங்கள் கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று முன்தினம் கூறினார்.
மேலும், 20ஆண்டுகளுக்கு முன்பு பேச முடியாதத் தலைப்புகளைப் பற்றி நம்மால் இன்று பேச முடிகிறது என்றாலும், நாம் தொடர்ந்து மதிப்புடனும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளித்தும் நடந்துகொள்ள வேண்டும் என அவர் கூறினார். பயங்கரவாதம் மட்டுமின்றி கருத்தியல், சுமூகவியல் பற்றிய பெருகிவரும் சகிப்புத் தன்மையின்மை, தீவிரவாதம் மற்றும் சமயச் சண்டைகள் ஆகிய சர்ச்சைகளையும் சிங்கப்பூர் தொடர்ந்து சந்தித்து வருவ தாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தைக் கொண்டாட 'ஹியுமேனிட்டி மெட்டர்ஸ்' என்னும் பல சமயக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாஜுலா கூட்டம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிதி மற்றும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, இக்கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

