ஆண்டுதோறும் புதிதாக 1,000 பேருக்குமேல் மது, போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்
தமது பதினைந்தாவது வயதில் பொழுதுபோக்காக போதைப்பொருளையும் மதுவையும் தொட, நாளடைவில் திரு தாமஸ் கோ அதற்கு அடிமையாகிவிட்டார்.
முப்பது வயதைக் கடந்தபின்னும் நாள்தோறும் அது நீடிக்கவே, உடல்நலக் கோளாறுகள், மணமுறிவு, நொடித்துப்போகும் நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அது காரணமானது.
அதனையடுத்து, அப்பழக்கத்தில் இருந்து அவர் விடுபட விரும்பினார். அதற்கு குடும்ப உறுப்பினர் ஒருவர் ஆதரவாக இருக்க, முதல் நடவடிக்கையாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெறத் தொடங்கினார்.
இப்போது 46 வயதாகும் திரு கோ, போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டார். அதனுடன் நின்றுவிடாது, மனநலக் கழகத்தின் தேசிய போதைப்பித்து நிர்வாகச் சேவையின் (நாம்ஸ்) துணை ஆலோசகராகவும் உள்ளார்.
தேசிய போதைப்பித்து விழிப்புணர்வு நாளையொட்டி, நேற்று மெய்நிகர் வழியாக நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது திரு கோ தமது கதையைக் கூறினார்.
போதைக்கு அடிமையாவது தொடர்பிலும் அறிவியல் சார்ந்த வழிகளில் அதிலிருந்து விடுபடுவதை ஊக்குவிப்பது தொடர்பிலும் விழிப்புணர்வை ஊட்ட தேசிய போதைப்பித்து விழிப்புணர்வு நாள் இலக்கு கொண்டுள்ளது.
தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைப் பொறுத்தவரை, போதைப்பொருளும் மதுவும் சிங்கப்பூரில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளதாக நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார். ஆண்டுதோறும் புதிதாக 1,000 பேருக்குமேல் அவற்றுக்கு அடிமையாவதாக அவர் சொன்னார்.
தீவிர உள்நோயாளி நச்சு அகற்றல் திட்டங்கள், நோயாளிகளுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்குமான வெளிநோயாளி ஆதரவுக் குழுக்கள் போன்ற சேவைகள் மூலம் போதையின் பிடியிலிருந்து நோயாளிகளை விடுபட வைப்பதில் 'நாம்ஸ்' முக்கியப் பங்காற்றி வருவதாக டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
2016 சிங்கப்பூர் மனநலக் கருத்தாய்வின்படி, மதுவிற்கு அடிமையானோர் நான்கு ஆண்டுகளுக்குள் உதவி நாடியதையும் 2010ல் அந்தக் கால அளவு 13 ஆண்டுகளாக இருந்ததையும் டாக்டர் ஜனில் சுட்டிக்காட்டினார்.
ஆதரவு தேவைப்படுவோர்க்காக அழைப்புச் சேவை எண்களையும் இணையவழி உரையாடல் சேவைகளையும் ஏற்படுத்தி, சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம், 'வி கேர்' சமூக சேவைகள், சூதாட்டப் பிரச்சினைக்கான தேசிய மன்றம் போன்ற சமூகப் பங்காளிகள் உதவி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
"தீய பழக்கங்களுக்கு அடிமையாகாத சமூகத்தை உருவாக்குவதிலும் பாதிக்கப்பட்டோர் அதில் இருந்து விடுபட ஆதரவு அளிப்பதிலும் நாம் அனைவரும் நமது பங்கை ஆற்ற முடியும். தொடக்கத்திலேயே குறுக்கிடுவது நல்ல பலன்களை அளிக்கும்," என்று டாக்டர் ஜனில் கூறினார்.
'ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, 'நாம்ஸ்' சேவையின் யூடியூப் பக்கம் வழியாக நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில், போதைக்கு அடிமையானவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அடிமைப் படுத்தும் போதைப்பொருள்கள், நடத்தை மாற்றங்கள், மீட்புச் சிகிச்சைகள் போன்றவை தொடர்பில் நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது.

