கடந்த வாரம் குட்டியை ஈன்றதில் இருந்து 'ஜியா ஜியா' பாண்டா கரடி சரியாக உண்பதில்லை. ஆயினும், புதிய தாய் பாண்டாக்களைப் பொறுத்தமட்டில் அப்படி இருப்பது இயல்புதான் என்று சிங்கப்பூர் வனவிலங்குப் பாதுகாப்பு (ஆர்டபிஸ்யூஎஸ்) அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜியா ஜியாவின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க மின்பகுளிகளையும் (எலக்ட்ரோலைட்) குளுக்கோஸ் திரவத்தையும் ஊசிமூலம் அதன் பராமரிப்பாளர்கள் கொடுத்து வருவதாக அந்த அமைப்பு கூறியது.
வரும் நாள்களில், ஒருநாளைக்குப் பலமுறை அதற்கு மூங்கில் தரப்படும் என்றும் அது வழக்கமான உணவுமுறைக்குத் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்போது 12 வயதாகும் 'ஜியா ஜியா' பெண் பாண்டாவும் 13 வயதாகும் 'கய் கய்' ஆண் பாண்டாவும் கடந்த 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூர்க்கு வந்தன. சீனாவின் செங்டுவில் இருந்து பத்தாண்டு காலத்திற்கு அவை கடனாகப் பெறப்பட்டன.
2015ஆம் ஆண்டில் இருந்து ஜியா ஜியாவைக் கருத்தரிக்கச் செய்ய இதுவரை ஏழுமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்மாதம் 14ஆம் தேதி காலை 7.50 மணிக்கு 'ரிவர் சஃபாரி'யில் அது ஒரு குட்டியை ஈன்றது.
இதனிடையே, 'ஜியா ஜியா' வெற்றிகரமாக குட்டி ஈன்றதற்காக சிங்கப்பூர் வனவிலங்குப் பாதுகாப்புக் குழுவினர்க்கு பிரதமர் லீ ஃபேஸ்புக் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அடைபட்டுக் கிடக்கும் பாண்டா கரடிகளை இனப்பெருக்கம் செய்ய வைப்பது அவ்வளவு எளிதல்ல என்று பிரதமர் லீ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.