$54,000 லஞ்சம்: முன்னாள் எஸ்எம்ஆர்டி ஊழியர் உட்பட மூவர்மீது குற்றச்சாட்டு
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றியபோது சோ சூன் ஹெங் என்ற 43 வயது ஆடவர் $54,000க்கும் கூடுதலான தொகையை லஞ்சமாகப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர்மீதும் அவருக்கு லஞ்சம் தந்ததாகக் கூறப்படும் யோங் மிங் ஜுன், 39, வோங் கிங் மூய், 47, ஆகிய இருவர்மீதும் நேற்று ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. சோவும் யோங்கும் சிங்கப்பூரர்கள்; வோங் ஒரு மலேசியர். லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில், மோட்டார் வாகன உதிரிப் பாகங்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தில் யோங்கும் மின்சார வேலைகளைச் செய்யும் ஒரு நிறுவனத்தில் வோங்கும் இயக்குநர்களாக இருந்தனர். 2016லும் சென்ற ஆண்டிலும் யோங்கிடம் இருந்து குறைந்தது 24,450 வெள்ளியை சோ லஞ்சமாகப் பெற்றதாகச் சொல்லப்பட்டது. அத்துடன், 2017-2019 காலகட்டத்தில் யோங்கிடம் இருந்தும் லஞ்சமாக அவர் குறைந்தது 28,700 வெள்ளியைப் பெற்றதாகக் கூறப்பட்டது. மற்ற நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள விலைப்புள்ளி குறித்த தகவல்களை வழங்குவதற்காக சோவிற்கு அவர்கள் இருவரும் லஞ்சம் தந்ததாகச் சொல்லப்பட்டது. ஊழல் தொடர்பில் சோ ஒன்பது குற்றச்சாட்டுகளையும் யோங் ஐந்து குற்றச் சாட்டுகளையும் வோங் மூன்று குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
'வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை மோசடிப் பேர்வழிகளிடம் பகிர்ந்தார்'
யுஓபி வங்கியின் 1,100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை மோசடிப் பேர்வழிகளிடம் பகிர்ந்ததாக அவ்வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. சீனக் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய சாவ் வென்சிங், 26, என்ற அப்பெண், முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டம் மற்றும் வங்கித்துறைச் சட்டத்தின்கீழ் 29 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சீன நாட்டவரான சாவ் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான சாவ், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பிணை வழங்க $15,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளையர்
குறைந்த வயதுப் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்தபோது, இன்னொரு குறைந்த வயதுப் பெண்ணைக் கருத்தரிக்கச் செய்த பதின்ம வயது ஆடவர் 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்போது 17 வயதாகும் அந்த இளையர் நாள்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வெளியே செல்லக்கூடாது. அத்துடன், 40 மணி நேரம் சமூக சேவையிலும் அவர் ஈடுபட வேண்டும். அச்சிறுமியுடன் இருமுறை உடலுறவு கொண்டதை கடந்த ஜூன் மாதம் அந்த இளையர் ஒத்துக்கொண்டார். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டபோது அச்சிறுமியர் இருவரும் 16 வயதுகூட எட்டாததை அந்த இளையர் அறிந்திருந்தார். அவரால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமி, கடந்த அக்டோபரில் தமது வீட்டைவிட்டு வெளியேறி, அந்த இளையரின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இருவரும் ஒரே கட்டிலில் உறங்கி, பாது காப்பற்ற உடலுறவு வைத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. அதனால் அச்சிறுமி கருத்தரித்ததாகவும் பின்னர் கருச்சிதைவு ஏற்படவே கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

