தோ பாயோ வட்டாரத்தில் உள்ள கழிவறை ஒன்றில் 52 வயது மாது ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 28 வயது ஆடவர் ஒருவர் மீது இன்று (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தோ பாயோவில் உள்ள கட்டடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உள்ள கழிவறையில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கும் 9.05 மணிக்கும் இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சியூ கீ ஹோக் எனும் அந்த ஆடவர், தம் மீது பாலியல் செயலைப் புரியவைக்க அந்த மாதைக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், அந்த மாதை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கழுவுதொட்டி மீது அவரது தலையை அடித்து அந்த ஆடவர் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அன்றிரவு 9.35 மணிக்கு சம்பவம் ஒன்று குறித்து தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்தனர். மாது ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
குற்றம் புரிந்த சியூ, சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டார். எனினும், அங் மோ கியோவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 10 மணி நேரத்திற்குள் போலிசார் அவரை கைது செய்தனர்.
தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இருப்பதாக சியூ இன்று குறிப்பிட்டார்.
கூடுதல் விசாரணைகளுக்காக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், இம்மாதம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

