எஸ்பிளனேட் எம்ஆர்டி நிலையத்தில் 'ஸ்கேட்போர்டிங்' விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளையர் ஒருவரை தள்ளிவிட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியை சேர்ந்த ஊழியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் விசாரணையில் உதவி வருவதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 21) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.25 மணியளவில் நிகழ்ந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது.
ஊழியரின் செயலுக்காக அந்நிறுவனம் மன்னிப்பு கோரியது.

