செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
24007798-cead-40a5-a1d8-d7b993f62507
-

வாகன ஓட்டுநருக்கு ஆலோசனை

ஷங்கிரி-லா ஹோட்டல் அருகே உள்ள சாலைகளில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை வாகன ஓட்டுநர்களுக்குத் தாமதம் ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது.

அந்த ஹோட்டலில் நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான பாதுகாப்பின் ஒரு பகுதியாக வாகனங்களை போலிசார் சோதனையிடுவார்கள். இதுவே தாமதத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டர்சன் ரோடு, ஆரஞ்ச் குரோவ் ரோடு நெடுகிலும் வாகனங்களில் போலிஸ் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்று போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

அந்த ஹோட்டலில் என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்பது பற்றிய விவரங்களை போலிசார் வெளியிடவில்லை. அந்த நாட்களில் ஷங்கிரி-லா ஹோட்டலுக்குள் வாகனங்களை நிறுத்தி வைப்பதும் வரம்புக்கு உட்பட்டே இருக்கும்.

கனரக வாகனங்கள் ஆரஞ்ச் குரோவ் ரோட்டில் செல்ல அனுமதி இராது. அந்தப் பகுதியில் பட்டம், வானுர்திகளைப் பறக்க விடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலிஸ் ஆலோசனை தெரிவித்து உள்ளது.

கடைவீடுகள் விற்பனை சாதனை: $1 பில்லியனை எட்டியது

சிங்கப்பூரில் கடைவீடுகள் விற்பனை புதிய சாதனையாகி உள்ளது. பழமைப் பாதுகாப்புக் கட்டடங்கள் வரம்புக்கு உட்பட்ட நிலையில் இருப்பது இதற்கு ஒரு காரணம்.

குறைந்த வட்டி விகிதம், உள்ளூர் மக்களிடம் நிலவும் அதிக நாட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியவை இதர காரணங்கள்.

கடைவீடுகள் விற்பனை ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்கில் 1 பில்லியனை எட்டியது என்று குஷ்மன் & வேக்ஃபீல்ட் நிறுவனம் தெரிவித்தது. இந்த அளவு 2019ல், சென்ற ஆண்டில் நிலவிய $900 மில்லியனைவிட அதிகம்.

இந்த ஆண்டுக்கான இந்தத் தேதி வரையிலான விற்பனை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் ஆக அதிகம் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் வோங் ஸியான் யாங் தெரிவித்தார்.

இதற்கு முன் 2018ல் இந்த விற்பனை மதிப்பு $1.5 பில்லியனாக இருந்தது.

எண் 44 மற்றும் எண் 46 கிளப் ஸ்திரீட் முகவரியில் உள்ள 999 ஆண்டுகள் குத்தகைக் காலத்தைக் கொண்ட இரண்டு கடைவீடுகள் மொத்தம் $25.5 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டன.

சதுர அடிக்கு $3,935 என்ற விலைக்கு அவற்றை வெளிநாட்டில் செயல்படும் ஒரு குடும்ப அலுவலகம் வாங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.