அமெரிக்கத் துணை அதிபரின் முதல் ஆசிய வருகை; தலைவர்களை இன்று சந்திக்கிறார்
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தார். அதன் மூலம் அவர் தென்கிழக்கு ஆசியாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கினார்.
அமெரிக்காவின் துணை அதிபராக கடந்த ஜனவரி மாதம் கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
அதற்குப் பின் அமெரிக்காவுக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவே ஆகும்.
ஏர் ஃபோர்ஸ் 2 விமானத்தில் வந்து நேற்றுக் காலை 10.50 மணிக்கு பாய லேபார் ஆகாயப் படைத் தளத்தில் திருவாட்டி ஹாரிஸ் தரையிறங்கினார்.
அவர், நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை சிங்கப்பூரில் இருப்பார். இங்கிருந்து அவர் வியட்னாம் செல்வார்.
சிங்கப்பூரில் நேற்று தரையிறங்கிய அமெரிக்கத் துணை அதிபரை ஆகாயப் படைத் தளத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
திருவாட்டி ஹாரிஸுடன் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே கொவிட்-19 பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு முகக்கவசத்துடன் வந்தனர்.
அமெரிக்கத் துணை அதிபரின் சிங்கப்பூர் பயணம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு வழக்கமாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.
சந்திப்புகளும் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வியாழக்கிழமை தெரிவித்து இருந்தார்.
திருவாட்டி ஹாரிஸ் வந்த விமானம், முதலில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஆங்கரெச் நகரில் தரையிறங்கியது. அங்கு எண்ணெய் நிரப்பிக்கொண்டது. பிறகு அங்கிருந்து பறந்து ஜப்பான் தலைநகர் தோக்கியோ வந்தது.
அந்த இரண்டு இடங்களிலும் திருவாட்டி ஹாரிஸ், 56, விமானத்துக்கு உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் துணை அதிபர் இன்று இஸ்தானாவில் அதிபர் ஹலிமா யாக்கோப்பை சந்திக்கிறார்.
அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திப்பார். அதையடுத்து பிரதமர் திரு லீயும் அமெரிக்கத் துணை அதிபரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திப்பார்கள்.
இஸ்தானாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், ஓர் ஆர்க்கிட் மலருக்குத் திருவாட்டி ஹாரிஸ் பெயர் சூட்டப்படும்.
சிங்கப்பூரில் சாங்கி கடற்படைத் தளத்திற்குச் செல்லும் திருவாட்டி ஹாரிஸ், யுஎஸ்எஸ் துல்சா என்ற அமெரிக்க போர்க் கப்பலையும் பார்வையிடுவார். அந்தப் போர்க் கப்பல், பலதரப்பு பயிற்சியையொட்டி இங்கு கரை அணைந்துள்ளது.
திருவாட்டி ஹாரிஸ் செவ்வாய்க்கிழமை கொள்கை உரையாற்றுவார். தொழில்துறைப் பிரமுகர்களுடன் வட்டமேசை விவாதிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று ஏற்கெனவே வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. அந்த விவாதிப்பில் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் பங்கெடுத்துக்கொள்வார்.
அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்ட்டின் சென்ற ஜூலையில் சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்கும் வருகை அளித்தார். அதைத் தொடர்ந்து துணை அதிபரின் பயணம் இடம்பெறுகிறது.

