சிங்கப்பூரில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
மோசமான பாதிப்புடன், உயிர்வாயு சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகள் 22 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 29 ஆக இருக்கிறது.
ஜூலை 28ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவு. சென்ற மாதம் 28ஆம் தேதியன்று இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது.
கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர், 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்கள். இவர்களில் 18 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.
இதனிடையே, கொவிட்-19 தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை 76 ஆகக் குறைந்தது என்றும் அமைச்சு குறிப்பிட்டது. ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான அளவாகும்.
இப்போதைய 76 குழுமங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 முதல் 1,155 வரை உள்ளது.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகம்/ ஹோங் லிம் சந்தை தொற்றுக் குழுமமே ஆகப் பெரியதாக இருக்கிறது.
இதனிடையே, இங்கு சனிக்கிழமை சமூகத்தில் புதிதாக 32 பேருக்குத் தொற்று உறுதியானது. இவர்களில் 16 பேருக்கு கிருமி எப்படி தொற்றியது என்பது தெரியவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 70 வயதைக் கடந்த ஒரு முதியவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து பேருக்குத் தொற்று இருந்ததும் சனிக்கிழமை தெரியவந்தது.
சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி 364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு குணமடைந்து வருவதாக அமைச்சு கூறியது.

