கோவன் ஹவ்காங் உணவங்காடியில் உணவு உட்கொண்ட பிறகு தட்டுகளையும் கரண்டிகளையும் திரும்பி வைக்குமாறு பொதுச் சுகாதார மன்றத்தின் விழிப்புணர்வுத் தூதர்கள் பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.
மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி'சில்வாவின் தலைமையில் நேற்று காலை அந்த நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட 'கீப் க்லீன், சிங்கப்பூர்!' எனப்படும் மன்றத்தின் 'சுத்தமாக வைத்திருங்கள், சிங்கப்பூர்!' இயக்கத்தின்படி உணவு உட்கொண்ட பிறகு தட்டுகளையும் கரண்டிகளையும் திரும்பி வைக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதனையொட்டி மன்றத்தின் தூதர்கள் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றி நினைவூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து உணவங்காடிகளில் உணவு உட்கொண்ட பிறகு தட்டுகளையும் கரண்டிகளையும் வாடிக்கையாளர்களே திரும்பிக் கொடுப்பது கட்டாயமாக்கப்படும்.
பயன்படுத்திய உறிஞ்சிக் குழல்கள், மெல்லிழைத் தாள்கள், உண்ட உணவின் குப்பை ஆகியவற்றையும் மேசையிலிருந்து அகற்றவேண்டும். காப்பிக் கடைகள், உணவு நிலையங்கள் ஆகியவற்றில் உணவு உட்கொள்வோருக்கு இந்த விதிமுறை இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் நடப்புக்கு வரும்.
விதிமுறைகளை மீறுவோர் மீது தேசிய சுற்றுப்புற வாரியம் நடவடிக்கை எடுக்கும். முதன்முறையாக விதிமுறைகளை மீறுவோருக்கு எழுத்து வடிவில் எச்சரிக்கை விடுக்கப்படும்.
இரண்டாவது முறையாக இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு 300 அபராதம் விதிக்கப்படும்.
அதற்குப் பிறகும் இவ்வாறு நடந்துகொள்பவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த நேரிடலாம்.

