எஸ்பிளனேட் பெருவிரைவு ரயில் நிலையத்தில் ஆடவர் ஒருவருடன் மோதி 'ஸ்கேட்போர்ட்' எனப்படும் சுறுக்குப்பலகையிலிருந்து அவரைத் தள்ளிவிட்ட எஸ்எம்ஆர்டி ஊழியர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியர் விசாரணையில் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியத்திற்கு உதவி வருகிறார்.
சம்பவம் பதிவான காணொளி இன்ஸ்டகிராம் தளத்தின் 'எஸ்ஜிஃபோலாஸ்ஓல்' பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. காணொளியில் மஞ்சள் சட்டையை அணிந்திருந்த ஒரு நபர் சறுக்குப்பலகையில் எஸ்பிலனேட் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
சிவப்பு மேல் சட்டையை அணிந்திருந்த மற்றோர் ஆடவர் வேகமாக மஞ்சள் சட்டை அணிந்திருந்தவரை நோக்கி வந்து அவரை சறுக்குப்பலகையிலிருந்து தள்ளிவிட்டார்.
தள்ளிவிடப்பட்டபோது அந்த நபர் ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளைச் சென்றடையவில்லை.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.25 மணிக்கு நிகழ்ந்தது.
பெருவிரைவு ரயில் நிலையங்களில் சறுக்குப்பலகைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று ஊழியர் நபரிடம் கூறியிருக்கிறார்.
நபர் படிக்கட்டுகளுக்கு அருகில் வந்தபோது அவரை நோக்கி வேகமாகச் சென்றதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
தங்கள் ஊழியர் தேவையில்லாமல் மோசமாக நடந்துகொண்டதற்கு எஸ்எம்ஆர்டி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

