தமது மனநலனைப் பேச மனம் திறந்து பேசுவது, மனதைத் திறந்துவைத்து மற்றவர்களைப் புரிந்துகொள்வதும் இன்றைய சூழலில் முக்கியமாகியுள்ளன. இளையர்களிடத்தில் இவை இரண்டையும் ஊக்குவிக்க மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சில முயற்சிகளை அறிந்துகொள்ளலாம்.
உன் இடத்தில் நான் இருந்தால்...
இந்து இளங்கோவன்
மருத்துவராக விரும்பும் ஒரு பெண் வேற்றின ஆடவரை விரும்புகிறார். பெற்றோரின் எதிர்பார்ப்புகள் இவருக்குச் சவாலாய் அமைகின்றன. தமது சமய நம்பிக்கையின் புற அடையாளத்தை அகற்றாமல், தேசிய சேவை, வேலை, காதல் போன்ற பல்வேறு அம்சங்களை எவ்வாறு சமநிலையுடன் சமாளிக்க முயலும் ஓர் இளையர்.
இவர்கள் எதிர்நோக்கும் கடினமான முடிவுகள் யாவை? இவர்கள் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம்?
இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்கு விளையாட்டின் மூலம் விடை காண முயற்சி செய்துள்ளது 'பெட்டர்.எஸ்ஜி' எனும் லாபநோக்கமற்ற அமைப்பு.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு கடந்தாண்டு நடத்திய 'மிஷன் யுனைட்டட் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றியடைந்த திட்டங்களில் இந்த அமைப்பு முன்வைத்த செயலியும் ஒன்று.
அமைப்பு உருவாக்கியுள்ள 'டு பி யூ' (To Be You) எனும் இந்த விளையாட்டுச் செயலி, கேலிச்சித்திர வடிவிலானது. முதற்கட்டமாக இதில் இரண்டு கற்பனைக் கதாபாத்திரங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவராக விரும்பும் மலாய் முஸ்லிம் இளையரான நாடியா பிண்டே ரஹீம், தமது சீக்கிய அடையாளத்தின் தலைப்பாகையை அணியும் இளையர் அமந்தீப் சிங் ஸஹோதா.
இவ்விரு கதாபாத்திரங்களாகவே மாறி நீங்கள் விளையாட்டில் பயணிக்கலாம். அவர்கள் வாழ்வின் அன்றாட தருணங்களை அனுபவிப்பதோடு, அவர்களுக்காக கடினமான முடிவுகளையும் நீங்கள் எடுக்க முடியும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை மாறும். விளையாட்டில் சிறுசிறு புதிர்களும் உண்டு.
சிங்கப்பூரில் இனம், சமயம், பாலினம் போன்ற அடையாளங்கள் பேசப்பட்டு வரும் சூழலில் அரசாங்க உதவியுடன் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஒவ்வொரு பாகமும் இனம், சமயம், பாலினம் போன்ற தனிப்பட்ட அடையாளத்தின் ஓர் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது அடையாளங்கள் பற்றியும் மன உணர்வுகள் பற்றியும் அதிகமான புரிதலை உருவாக்க உதவும் என்று பெட்டர்.எஸ்ஜி நம்புகிறது.
சிங்கப்பூரில் ஒரு மில்லியனுக்கு மேற் பட்டவர்கள் இணைய விளையாட்டுகளில் (gaming) ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் தினமும் கைபேசி விளையாட்டுகளை விளையாடுகின்றனர். பெட்டர்.எஸ்ஜி இதைப் பயன்படுத்திக்கொண்டது.
"இளையர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவர்களை ஈடுபடுத்தவும் கைபேசி விளையாட்டு செயலிகள் சிறந்த வழி," என்றார் 'பெட்டர்.எஸ்ஜி' அமைப்பின் தலைமை நிர்வாகி கவுரவ் கீர்த்தி.
"கல்வி வழியாகவோ, பாடங்கள், கற்றல் பயணங்கள் மூலமாகவோ பிற இன, சமய, பண்பாட்டுக் கூறுகள் பற்றிய ஆழமானப் புரிதலை ஏற்படுத்துவது கடினம். அனுபவம் மூலம் இந்தப் புரிதல் ஏற்பட வேண்டும் என்பது எங்கள் குழுவின் நம்பிக்கை," என்றார் திரு கவுரவ்.
சிங்கப்பூரில் உள்ள தனிநபர் அடையாளப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்தச் செயலியைத் தமது அமைப்பு உருவாக்கியதாக அவர் கூறினார்.
கேலிசித்திர ஓவியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 70 கொண்ட குழு சுமார் எட்டு மாதத்தில் செயலியை உருவாக்கியது.
'டு பி யூ' இலவச விளையாட்டைப் பின்வரும் இணையத்தளத்துக்குச் சென்று விளையாடலாம்: tobeyou.sg

