ப.பாலசுப்பிரமணியம்
"நலமா இருக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு உண்மையாகப் பதிலளித்திருக்கிறோமா என்று சிந்திக்க வைக்கிறது ஒரு சமூக விழிப்புணர்வு திட்டம்.
'மோர் தென் ஐம் குட்' (More than 'I'm good) எனும் இத்திட்டம், '#ஹார்ட்ஸ்பிட்ஸ் டிசைன் ஜாம்' எனும் சமூகத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இணையத்தில் மனநலன் காத்தல், இணைய வழித் தொல்லை, இணையத் திறன் போன்ற விவகாரங்களைச் சமாளிக்க மின்னிலக்க இயக்கங்களை உருவாக்கவும் மன நலனையும் மீள்திறனையும் சமூகத்தினரிடையே உண்டாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தேசிய இளையர் மன்றமும் 'ஃபேஸ்புக்' அமைப்பும் கைகோர்த்து இதனை நடத்துகின்றன.
சுமார் 12 இளையர் குழுக்கள் இதில் பங்கெடுத்து, இணையத்தில் மனநலன் காக்க உதவும் தங்கள் திட்டங்களை முன்வைத்தன.
அவற்றில் ஒன்றான 'மோர் தென் ஐம் குட்' எனும் திட்டத்தில் தொண்டூழியராக இடம்பெற்றுள்ளார் கணக்கியல் செயல்பாட்டு நிர்வாகியான 26 வயது இளையர் ஜசிம் ஜலால்.
நான்கு பேர் கொண்ட இவரது குழு, இணையத்தில் இளையர்கள் பாதுகாப்பான முறையில் தன்னம்பிக்கையோடு தங்களது எண்ணங்களையும் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் இயக்கத்தைத் தேர்வு செய்தது.
'ஹே, வீகேர்' (Hay. wecare) எனும் பெயரில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கி இளையர்களை காணொளிவழி நேர்காணல் செய்யும் யோசனையை முன்வைத்தனர். அதற்கு ஏற்பாட்டளர்களின் ஆதரவையும் பெற்றனர்.
அதன்படி, சமூக ஊடகப் பதிவுகளில் 'நலமாக இருக்கிறீர்களா' என்ற கேள்விக்கு இளையர்கள் வெளிப்படையாக பதில் அளிப்பதுடன், அக்கேள்வி தங்களுக்குள் ஏற்படுத்தும் எண்ணங்களைப் பற்றி விவரித்து வருகின்றனர்.
இந்தச் சமூக ஊடகப் பதிவுகளில் உயிரோவியம், 'ஜிங்கல்' எனும் துணுக்குப் பாடல், ஏ.ஆர். ஃபில்டர்ஸ் எனும் மிகை மெய்நிகர் படிமங்கள் போன்ற அம்சங்களை குழுவினர் உள்ளடக்கியுள்ளனர்.
மகிழ்ச்சியான முறையில் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஊக்குவிப்பதற்கு குழுவினர் ஏ.ஆர். ஃபில்டர்ஸ் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினர் என்று ஜசிம் கூறினார்.
தங்களது குழு இளையர்களிடம் மேற்கொண்ட கருத்தாய்வில், 50% இளையர்கள் நெருக்கமானவர்களிடம் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர் என்று ஜசிம் கூறினார்.
திட்டப் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ள 25 வயது ஏவியல் டியோவின் நண்பர் எதிர்பாராது தமது உயிரை மாய்த்துக்கொண்டபோது மனநலம் எவ்வளவு பெரிய பிரச்சினை என்ற புரிதல் உருவானது.
இளையர்களின் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் கொண்ட "மோர் தென் ஐம் குட்" திட்டம் உருவாக இதுவே உந்துதல் என்று ஜசிம் கூறினார்.
"மனநலப் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இயல்பாக இருக்கும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். இளையர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்கு பாதுகாப்பான தளம் தேவை. இதன் மூலம், விபரீத முடிவுகளின் சாத்தியத்தைக் குறைக்கலாம்," என்று தங்கள் திட்டத்தின் நோக்கம் பற்றி ஜசிம் விளக்கினார்.
இதில் கூச்சமோ, தயக்கமோ கூடாது. இத்தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதால், இத்தளங்களில் தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் அவர்கள் மெல்ல மெல்ல பகிர்ந்துகொள்ள முன்வருவர் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார் ஜசிம்.
இன்னும் அதிகமான இளையர்களைச் சென்றடைய, 'ஃபேஸ்புக்', 'இன்ஸ்டகிராம்' நிறுவனங்களின் நிபுணர்களிடமிருந்தும் இக்குழுவினர் ஆலோசனை பெற்று வருகின்றனர். குழுவினர் தங்கள் இலக்குகள் சிலவற்றை எட்டியதும், திட்டத்துக்கு $4,000 மானியத் தொகை வழங்கப்படும்.
வரும் அக்டோபர் மாதம், உலக மன நல தினம் அன்று #Heartbits Design Jam எனும் திட்டத்தில் இடம்பெறும் இதுபோன்ற படைப்புகள் மெய்நிகர் வழி காட்சிக்கு வைக்கும் திட்டம் உண்டு.