இணையப் பாதுகாப்பில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் அணுக்கமாகப் பணியாற்றும்

இணையப் பாதுகாப்பில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் அணுக்கமாகப் பணியாற்றும்

2 mins read
cefce4a0-ed05-4352-acbc-92f888c22cd4
பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் இஸ்தானாவில் இன்று (ஆகஸ்ட் 23) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இணையப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து, இணையப் பாதுகாப்புச் சம்பவங்களுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் அணுக்கமாக சேர்ந்து பணியாற்றும்.

இரு நாடுகளுக்கும் இடையே இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

இணையப் பாதுகாப்பு பங்காளித்துவ உறவுமுறையை ஆழப்படுத்த மூன்று இணக்கக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன. நிதித் துறை தொடர்பிலான மின்னிலக்கத் தகவலை நாடுகள் பகிர்வதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றும் அந்த இணக்கக் குறிப்புகளில் அடங்கும்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சேர்ந்து இஸ்தானாவில் இன்று (ஆகஸ்ட் 23) பிரதமர் லீ சியன் லூங் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இந்த மூன்று உடன்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

திருமதி ஹாரிஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சிங்கப்பூரில் இருப்பார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, நீடித்த உறவுகளை மறுஉறுதி செய்த தலைவர்கள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைப் பற்றி கலந்தாலோசனை நடத்தினர்.

"புதிய பங்காளித்துவ உறவுமுறை அம்சங்களில் நாங்கள் ஈடுபடப்போவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இணையப் பாதுகாப்பு, தற்காப்பு, நிதித் துறை அமைப்புகளுக்கு இடையில் மூன்று உடன்பாடுகளை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்," என்று பிரதமர் லீ கூறினார்.

அதிகரித்து வரும் மிரட்டல்களை எதிர்கொள்வதோடு நிதி நிறுவனங்கள், தற்காப்பு அமைப்புகள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக திருமதி ஹாரிஸ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்