சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தைப் பிறருக்குச் சிலர் விற்பதாக வெளிவந்த செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நேரம் உறுதியானதை அடுத்து, அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு அதைப் பிறருக்கு விற்கக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு எதிராக நியாயமற்ற வகையில் நடந்துகொள்ளக்கூடாது," என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.
இத்தகைய முறையற்ற செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாராத அமைச்சு தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் விற்கப்படுவது தெரியவந்தால் தவறு செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நேரத்தைப் பிறரிடமிருந்து வாங்க நான்கு பேர் கடந்த புதன்கிழமையன்று கெரசல் மின் வர்த்தகத் தளத்தில் விளம்பரம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் $50லிருந்து $80 வரை கொடுக்கத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

