2023 ஏபெக் மாநாடு: அமெரிக்கா நாட்டம்

2023 ஏபெக் மாநாடு: அமெரிக்கா நாட்டம்

3 mins read
a0ebc909-3420-4eda-b94f-4cf8af46206c
லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியும் சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று கொள்கை உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கமலா ஹாரிஸ்: பெரிய, ஆற்றல்மிக்க தென்கிழக்கு ஆசிய சந்தை முக்கியம் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது

ஏபெக் எனப்படும் ஆசியப் பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப் பின் மாநாட்டை 2023ஆம் ஆண்டில் ஏற்று நடத்த அமெரிக்கா முன்வந்து இருக்கிறது.

உலகின் ஆகப் பெரிய, மிகவும் ஆற்றல்மிக்க தென்கிழக்கு ஆசிய சந்தை அமெரிக்காவுக்கு முக்கியம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தை நடத்த அமெரிக்கா நாட்டமுடன் இருப்பதாக அந்த நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருக்கும் அமெ ரிக்கத் தூதரகமும் லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நேற்று திருவாட்டி கமலா கொள்கை உரை ஆற்றினார். அந்த நிகழ்ச்சி கரையோர பூந்தோட்ட வளாகத்தில் நடந்தது.

அமெரிக்காவின் பொருளியல் ஏறத்தாழ 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தன் நாட்டில் சம்பளமும் வேலை நியமன விகிதமும் கூடி வருவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வளர்ச்சி அந்த நாட்டுடன் நின்றுவிடக் கூடாது. அது அமெரிக்கப் பங்காளி நாடுகளுக்கும் நன்மை அளிக்கும், அளிக்க முடியும் என்ற துணை அதிபர், அமெரிக்க பொருளியல், தென்கிழக்கு ஆசியப் பொருளியலுடன் மிகவும் தொடர்புகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அமெரிக்காவின் ஆகப் பெரிய நான்காவது ஏற்றுமதி சந்தையாக தென்கிழக்கு ஆசியா திகழ்கிறது என்றும் இந்த வட்டாரத்துடன் கூடிய வர்த்தகம் 600,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம் இப்போது முன்பைவிட அதிகமாக பின்னிப்பிணைந்து இருப்பதாகவும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், நாடுகள் ஒன்று சேர்ந்து சவால்களைச் சமாளித்து வாய்ப்புகளை உருவாக்க நாட்டத்துடன் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் பங்காளித்துவ உறவு, கள்ளம் கபடமில்லாத, திறந்த, எல்லாரையும் உள்ளடக்கிய, பரஸ்பர நன்மைகளுக்கான ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்த அவர், தாராள திறந்த இந்தோ-பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.

அந்த வட்டாரம் அமெரிக்காவின் நலனையும் அதன் பங்காளிகளின் நலனையும் மேம்படுத்தும் என்றும் திருவாட்டி ஹாரிஸ் குறிப்பிட்டார். இரு தரப்பு அணுக்க உறவை ஆழமாக்குவதோடு ஆசியான் போன்ற நன்கு நிலைபெற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பல தரப்பு ரீதியிலும் அமெரிக்கா பாடுபடும் என்று அந்த நாட்டின் துணை அதிபர் தெரிவித்தார்.

21வது நூற்றாண்டு வரலாறு எழுதப்படும்போது அதன் பெரும் பகுதி இந்தோ-பசிபிக் வட்டாரத்தை மையப்படுத்தியே இருக்கும் என்றார் அவர்.

பாதுகாப்பு பற்றி கருத்துரைத்த அவர், இந்த வட்டாரத்திற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினார்.

சுதந்திரமான கடல் வழிக்கு அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தென் சீனக் கடலில் சீனா விடுக்கும் மிரட்டல்கள் பற்றி கருத்துரைத்த அவர், இதைப் பொறுத்த வரை, அமெரிக்கா தன்னுடைய தோழமை நாடுகளுக்கும் பங்காளி நாடுகளுக்கும் தோளோடு தோள் கொடுக்கும் என்றார்.

தென் கிழக்கு ஆசியாவிலும் இந்தோ-பசிபிக்கிலும் அமெரிக்காவின் ஈடுபாடு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட அவர், யாரும் ஏதாவது ஒரு நாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ள வலியுறுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டதும் அல்ல என்று தெரிவித்தார்.

உலக சுகாதாரப் பாதுகாப்பு, மனித உரிமை ஆகியவற்றைப் பலப்படுத்துவதில் அமெரிக்கா நாட்டம் கொண்டிருப்பதாகவும் திருவாட்டி ஹாரிஸ் கூறினார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி குறிப்பிட்ட துணை அதிபர், அமெரிக்கர்களையும் அனைத்துலக பங்காளி நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்காவுக்கு உதவியவர்களையும் அங்கிருந்து மீட்பதிலேயே அமெரிக்கா ஒருமித்த கவனத்தைச் செலுத்தி வருகிறது என்றும் இதற்காக சிங்கப்பூர் போன்ற பங்காளி நாடுகளுக்கு அமெரிக்கா நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க துணை அதிபர் நேற்று வியட்னாம் புறப்பட்டுச் சென்றார்.