சிங்கப்பூரில் முன்பு ஆகஸ்ட் மாதம் முழுவதும் பெய்துள்ள மழையைவிட அதிக மழை நேற்று நாட்டின் மேற்குப் பகுதியில் மூன்றே மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.
புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் நேற்றுக் காலை 7.50 மணி முதல் 10.40 மணி வரை 159.8 மி.மீ. மழை பெய்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
இது, ஆகஸ்ட் மாதத்திற்கான சிங்கப்பூரின் சராசரி மாதாந்திர மழை அளவில் 109 விழுக்காடுக்குச் சமம் என்று கழகம் தெரிவித்தது.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மழை மிக வலுவாக பெய்தது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
நண்பகலில் மண்டாயில் 239.8 மி.மீ., புக்கிட் பாஞ்சாங்கில் 226.2 மி.மீ. மழை பதிவாகியது. இந்த அளவு, இன்றைய தேதி வரை ஆக அதிக அன்றாட மொத்த மழை அளவாகும். இதற்கு முன் 1983 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சாங்கியில் 181.8 மி.மீ. மழை பெய்து இருந்தது.
மண்டாயில் நேற்று நண்பகலில் கடும் மழை பெய்தது. வெப்பநிலையும் குறைந்தது. நியூட்டனில் ஆகக் குறைவாக 21.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. கடும் மழை காரணமாக கால்வாய்களிலும் வடிகால்களிலும் நீர்மட்டம் உயர்ந்தது. சில பகுதிகளில் 90 விழுக்காட்டுக்கு அவை நிரம்பின.
அப்பர் புக்கிட் தீமா வட்டாரம், உட்லண்ட்ஸ், சன்செட் டிரைவ் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்தது.
டன்னர்ன் ரோட்டில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு சைம் டார்பி சென்டருக்கும் பிஞ்சாய் பார்க்குக்கும் இடையில் ஏற்பட்ட வெள்ளம் முற்பகல் 10.50 மணிக்கு வடியத் தொடங்கியது.
பொதுப் பயனீட்டுக் கழக குழுவினர் போக்குவரத்தை திருப்பிவிட்டு உதவினர். பல பேருந்து சேவைகளும் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டன.
ஆகஸ்ட் முழுவதும் இடியுடன் அதிக மழை பெய்யும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து இருந்தது.
தேசிய சுற்றுப்புற வாரியம் அடுத்த ஒரு சில நாட்களில் காலையிலும் பிற்பகல் முன் நேரத்திலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

