செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3440f4f6-f54c-41bf-807f-356192dad7f6
-

கொவிட்-19: அதிகமான மரணங்கள் நிகழ காரணங்கள்

சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மொத்தம் 50 பேர் மாண்டுவிட்டனர். அவர்களில் 13 பேர் இந்த மாதத்தில் மட்டும் மரணமடைந்துள்ளனர்.

அந்த மரணங்களில் பெரும்பாலானவை, இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக நிகழ்ந்தவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அன்றாட தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது என்று அமைச்சர் விளக்கினார்.

இந்த மாதத்தில் மரணமடைந்த 12 பேரில் 11 பேர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதை ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று காரணமாக இந்த மாதம் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்.

அவர்களில் பலரும் எற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதைப் பார்க்கும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது என்றார் அமைச்சர்.

தங்களுக்கு நோய்கள் இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று பலரும் கவலை அடைகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், இவர்களில் பலருக்கும் தடுப்பூசி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்றார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் கொவிட்-19 கிருமி தொற்றும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கான காரணம் என்றார் திரு ஓங்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 86 வயது மாது மரணம்

கொவிட்-19 தொற்று காரணமாக 86 வயது மாது ஒருவர் மாண்டுவிட்டதாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை.

கிருமி தொற்றி இருந்த ஒரு நோயாளியுடன் அந்த மாதுக்கு அணுக்கத் தொடர்பு இருந்தது ஆகஸ்ட் 2ஆம் தேதி தெரியவந்தது.

அந்த மாதுக்குப் புற்றுநோய், இரத்த அழுத்த பாதிப்பு உண்டு. அவர் ஜூலை 23ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் இவரையும் சேர்த்து மொத்தம் 13 பேர் மாண்டுவிட்டனர். சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மொத்தம் 50 பேர் மரணமடைந்து உள்ளனர்.

கழிவுநீரில் கிருமித் தடயம்: மாணவர்களுக்குப் பரிசோதனை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் 38 பேருக்கும் திங்கட் கிழமை கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் புளோக் 61, மாணவர் விடுதி 13ன் கழிவுநீரில் கொவிட்-19 கிருமித் தடயம் காணப்பட்டதை அடுத்து இந்தப் பரிசோதனை இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட புளோக்கிற்குப் பக்கத்தில் இருக்கும் பலநோக்கு அரங்கில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.

கழிவுநீரில் தடயம் தெரியவந்த உடனேயே மாணவர்கள் எல்லாரும் அவரவர் அறை யிலேயே உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

புளோக் 61 கட்டடத்திற்கு வரவேண்டாம் என்றும் உடல் நலனைப் பார்த்துக்கொள்ளும்படியும் உடல் நிலை சரியில்லை எனில் வளாகத்திற்கு வரவேண்டாம் என்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவரவர் துறை ஆதரவு வழங்கும் என்றும் மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பல்கலைப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.