கொவிட்-19 காலகட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் மனநலக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களில் கிட்டத்தட்ட 13 விழுக்காட்டினரிடம் மனக்கலக்கம் அல்லது மனஉளைச்சலுக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
ஆயினும், கொரோனா கிருமி தொடர்பான மனநலப் பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ உதவி நாடத் தயாராக இருப்பதாக அவர்களில் 81.8 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் முதற்கட்ட முடிவுகள், நேற்று நடந்த 'சிங்கப்பூர் மனநலக் கருத்தரங்கு 2021' நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டன.
ஹாங்காங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2020 முதல் முதல் இவ்வாண்டு ஜூன்வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 1,058 சிங்கப்பூர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்றனர்.
அவர்களை நேர்கண்டதற்கு இரு வாரங்களுக்குமுன், 8.7 விழுக்காட்டினர் மனஉளைச்சலுக்கான அறிகுறிகளையும் 9.4 விழுக்காட்டினர் மனக்கலக்கத்திற்கான அறிகுறிகளையும் கொண்டிருந்தனர். 4.8 விழுக்காட்டினர்க்கு இவ்விரு பிரச்சினைகளுமே இருந்தன.
மேலும், 9.3 விழுக்காட்டினர்க்கு மிதமானது முதல் கடுமையான மனஅழுத்தமும் 7.6 விழுக்காட்டினர்க்கு உறக்கமின்மை பிரச்சினையும் இருந்தன.
ஆய்வு முடிவுகள் சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதைக் குறிப்பிடுகின்றனவா என்று கேட்டதற்கு, ஆய்வு முடிவுகளைத் துல்லியமாக ஒப்புநோக்குவதற்கான புள்ளிவிவரங்கள் இப்போதைக்கு இல்லை என்று மனநலக் கழக மருத்துவக் குழுவின் (ஆய்வு) துணைத் தலைவர் டாக்டர் மைதிலி சுப்பிரமணியம் கூறினார்.
அதே வேளையில், கொவிட்-19 பரவலுக்குமுன் மனநலக் கழகம் 350 பேரிடம் நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட மூன்று விழுக்காட்டினரிடம் மனக்கலக்கத்திற்கான அறிகுறிகளும் ஆறு விழுக்காட்டினரிடம் மனஉளைச்சலுக்கான அறிகுறிகளும் காணப்பட்டதாக டாக்டர் மைதிலி குறிப்பிட்டார். அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இவ்விரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிடுவது கடினம் என்ற அவர், "உறுதியாக, மனநலப் பிரச்சினை கூடியிருப்பதுபோல் தோன்றுகிறது," என்றார்.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை கொரோனா தொற்றிவிடக்கூடிய அபாயம், பண இழப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகிய மூன்று விஷயங்களே மனஅழுத்தத்திற்கான முக்கியக் காரணிகளாகப் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.
இருந்தபோதும், 81.8 விழுக்காட்டினர் மனநலப் பிரச்சினைகளுக்காக உதவிநாட தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அது நல்ல விஷயம்தான் என்றும் டாக்டர் மைதிலி கூறினார்.
அதே நேரத்தில், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூர் தனது செயலாற்றலை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
"பெரும்பாலும் தனியார் மருத்துவர்களிடம் ஆலோசகர்களிடமும்அவர்கள் செல்ல விரும்புவர். ஆகையால், அப்பிரிவினர்க்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும்," என்றார் டாக்டர் மதிலி.
பங்கேற்பாளர்கள் விரைவில் மீண்டெழவும் அவர்கள் மனஉளைச்சலாலும் மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கவும் சமூக ஆதரவு போன்றவை கைகொடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சமூக, நிறுவன ரீதியான ஆதரவு, நிபுணத்துவ ஆதரவு கிடைக்க வழிவகையின் அவசியத்தை டாக்டர் மைதிலி குறிப்பிட்டார்.
"சிங்கப்பூரர்களின் மனநலத்தில் கொவிட்-19 குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாம் மீள்திறனுடன் கூடிய சமுதாயத்தைக் கொண்டுள்ளோம். ஆனால், மீள்திறனானது தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பல்ல என்பதை நாம் உணர வேண்டும்," என்று அவர் சொன்னார்.

