கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 16 வயதான ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கான மனநல மதிப்பீடு முடிந்துவிட்டது. இதனையடுத்து, அவன் மேலும் ஒரு வார காலத்திற்கு போலிஸ் காவலில் வைக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டது.
அவனுடைய குடும்பத்தினர் அவனுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை போலிஸ் மேற்கொள்ளும் என்று அரசாங்கத் தரப்பு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. காணொளி வழியாக நேற்று அவன் விசாரணையில் முன்னிலையானான்.
கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளிக் கழிவறையில் வைத்து 13 வயது மாணவன் ஒருவனைக் கொலை செய்ததாக அந்தப் பதின்ம வயது இளையர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து, 2019ஆம் ஆண்டில் அவன் மனநலக் கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவன் சார்பில் வழக்கறிஞர் சுனில் சுதீசன் வாதாடுகிறார்.
இந்த வழக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

