துணை போலிஸ் அதிகாரியான திரு மர்ட்ஸுக்கி மேட்னர் நேற்றுக் காலையில் பெரும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, எதுவும் தவறாக நடந்திருக்காது என்று நினைத்தார்.
அவ்வேளையில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்தது. காலை 6 மணியில் இருந்தே அவ்வப்போது இடிச்சத்தமும் கேட்டது.
ஆயினும், புளோக் 439Bன் மூன்றாம் தளத்தில் வசிக்கும் 42 வயதான திரு மர்ட்ஸுக்கி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியைப் பார்த்த பிறகே வெடிப்பு நிகழ்ந்ததை உணர்ந்தார்.
அங்குள்ள ஒரு அடுக்குமாடி கார் நிறுத்தப் பூங்காவின் தரைத் தளத்தில் இருக்கும் ஒரு கழிவுநீர்க் குழியில் இருந்து தீப்பிழம்பு வெளிப்பட்டதை அவ்வழியாகச் சென்ற ஒரு காரின் புகைப்படக்கருவியில் பதிவான அக்காணொளி காட்டியது.
"வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகே அந்த கார் இருந்தது. சரியாக அதே இடத்தில் அந்த கார் சென்றிருந்தால், அதன் ஓட்டுநர் காயமடைந்து இருக்கக்கூடும்," என்றார் திரு மர்ட்ஸுக்கி.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட், புளோக் 439ல் இருக்கும் ஒரு கழிவுநீர்க் குழியிலிருந்து நேற்றுக் காலை திடீரென வெடிப்பு நிகழ்ந்து, தீப்பிழம்பு வெளிப்பட்டது குறித்து காலை 9.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒருவரும் காயமுற்றதாகத் தகவல் இல்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
"அச்சம்பவம் தற்செயலாக நடந்தது என்று முதற்கட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், விசாரணை தொடர்கிறது," என்று குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு நேற்றுக் காலை 11 மணியளவில் சென்றபோது, அங்கு போலிசாரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் 'எஸ்பி' குழும நிறுவனத்தினரும் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

