செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3fed1d08-4cb6-45ed-bdab-2087a75c0eca
-
Google News Preferred Icon

194 மாணவர்களுக்குச் சிறப்பு விருது

மெய்நிகர் முறையில் நேற்று நடந்த கல்வி அமைச்சின் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில், பல்வேறு துறைகளில் சாதித்த 194 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்களில் 19 வயதான அனிகேத் தேஜ்பாலும் ஒருவர். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாமாண்டு கணினிப் பொறியியல் படிக்கும் அனிகேத், மூச்சுக்காற்றிலுள்ள 'அசிட்டோன்' எனும் வேதிப்பொருளின் அளவைக் கொண்டு, நீரிழிவு அல்லது நீரிழிவால் பாதிக்கப் படும் அபாயம் இருப்பவர்களின் சர்க்கரை அளவைக் கண்டறியும் பகுப்பாய்வுக் கருவியை, சக மாணவர்கள் இருவரின் துணையுடன் கண்டுபிடித்தார். விருது வென்ற மாணவர்கள், சிங்கப்பூர் கல்விமுறை வளர்க்க விரும்பும் தரநிலைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மெச்சினார்.

வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய பெண்ணுக்கு மூன்று வாரச் சிறை

கடுமையான சுவாசத் தொற்று இருந்ததால் மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டு, வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்று 22 வயது நொர்லியானா ஹஸுலியானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இருமல், சளி காரணமாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அவர் கிளமெண்டி பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு நான்கு நாள்கள் மருத்துவ விடுப்பு தரப்பட்டு, அந்தக் காலகட்டத்தில் அவர் வீட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், நொர்லியானா அந்த உத்தரவை மீறி வெளியே சென்றார். இதையடுத்து, வீட்டில் தங்கும் உத்தரவிற்கு இணங்கத் தவறியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோன்ற இன்னொரு குற்றச்சாட்டும் மற்றவர்களுக்கு கொவிட்-19 தொற்றும் அபாயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அதிகமாகப் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானப் பிரிவினர்

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காகக் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நோய்ப் பரவல் முறியடிப்பத் திட்டம், குடும்பங்களிடம் சீரற்ற பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே அவர்கள் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்.ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், அனைத்து வருமானப் பிரிவுகளிலும் பத்தில் மூன்றுக்கும் குறைவான குடும்பங்கள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தது.