சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் கண் மருந்தகத்தில் சிகிச்சை பெறும் கிட்டத்தட்ட 73,500 நபர் களின் தனிப்பட்ட தகவல்களும் மருத்துவத் தகவல்களும் கணினிக் கட்டமைப்பைப் பாழ்படுத்தும் இணைய ஊருருவலில் பாதிக்கப்பட்டுள்ளன.
'ஐ அண்ட் ரெட்டினா சர்ஜன்ஸ்' (ஈஆர்எஸ்) எனும் அந்த மருந்தகம் நேற்று இத்தகவலைத் தெரிவித்தது. நோயாளிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை எண்கள், தொடர்பு எண்கள், மருத்துவத் தகவல்கள் உள்ளிட்டவை ஊடுருவப்பட்டன.
எனினும் கடன்பற்று அட்டை அல்லது வங்கிக் கணக்குத் தகவல்கள் எவையும் ஊடுருவப்படவில்லை என்றது அந்த மருந்தகம்.
அந்தத் தனியார் மருந்தகம், தனது கணிணிக் கட்டமைப்பு முழுமையாக சோதிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாகக் கூறியது.
அத்தகைய ஊடுருவல் மீண்டும் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈஆர்எஸ் மருந்தகம் சொன்னது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஊடுருவல்காரர்களுக்குப் பணம் தந்தால்தான் தகவல்களைப் பயன்படுத்த இயலும் வகையில் மிகவும் நுணுக்கமான இணைய ஊடுருவலுக்கு மருந்தகம் உள்ளானது.
மருந்தகத்தின் கெம்டன் கிளை பாதிக்கப்பட்டபோதும் அதன் நொவீனா கிளை பாதிக்கப்படவில்லை.

