ஹாங்காங், மக்காவிலிருந்து 200 பயணிகள் வர அனுமதி
ஹாங்காங், மக்காவ் ஆகிய நகர்களிலிருந்து சிங்கப்பூருக்கு வர 200க்கும் மேற்பட்ட குறுகியகால வருகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தத் தகவலை நேற்று தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி ஹாங்காங்கிலிருந்து 230 பேருக்கும் மக்காவிலிருந்து 13 பேருக்கும் சிங்கப்பூர் வர விமானப் பயண அனுமதியைத் தான் வழங்கியிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
இன்றுமுதல் அவர்கள் சிங்கப்பூருக்கு வர அந்தப் பயணச்சீட்டு அனுமதி வழங்கும். அவற்றுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கின.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் பயணிகள் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டு. அதில் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தால் சிங்கப்பூரில் தங்களது சொந்த நடவடிக்கைகளைப் பயணிகள் மேற்கொள்ளலாம். வசிப்பிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை அவர்கள் நிறைவேற்ற தேவையிராது. ஆனால், சிங்கப்பூரில் இருக்கும் காலத்தில் அவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 'டிரேஸ்டுகெதர்' செயலியை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
வோங்: வழக்கநிலைக்குத் திரும்புவதில் நாடு தனிப்பாதை அமைக்க வேண்டும்
மீண்டும் திறப்பதிலும் கிருமித்தொற்றுக்கு முந்தைய வழக்கநிலையை எட்ட முயல்வதிலும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கப்பூர் தனிப்பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சரும் கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை இன்னும் மேம்பட வேண்டும் என்றும் நமது மருத்துவக் கட்டமைப்பு மீது தாளாத சுமை ஏற்படுத்தும் அளவுக்கு தொற்றுப்பரவல் பெருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திரு வோங் கூறினார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் திரு வோங் இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் எந்த வேகத்தில், எந்த அளவுக்கு திறக்கவேண்டும் என்பதில் இருவேறுபட்ட எதிர்க்கருத்துகள் உள்ளதை விவரித்த திரு வோங், நியூசிலாந்து, சீனா போல கடும் கட்டுப்பாடுகளையும் முடக்கங்களையும் கொண்டுவந்து, கிருமித்தொற்றை ஒழித்த பின்பு திறப்பது சிங்கப்பூருக்கு சாத்தியப்படாது என்று அவர் தெரிவித்தார்.
துக்கம், இழப்பு பற்றி அறிந்துகொள்ள
கலைக் கண்காட்சியும் மாநாடும்
துக்கம், இழப்பு ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட, கலைக் கண்காட்சி, பயிலரங்குகள், மாநாடு, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடுத்த மாதத்தில் மூன்று வாரத்துக்கு நடைபெறும்.
துக்கத்தால் ஆன திரைச்சீலை (Tapestries of Grief) எனும் அந்த மூன்று வார நிகழ்வுக்கு கிரீஃப் மேட்டர்ஸ் எனும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. துக்கம் பற்றியும் துக்கப்படுவோருக்கு ஆதரவான சமூகப் பழக்கங்களையும் பற்றியும் அறிந்துகொள்வதையும் ஊக்குவிக்கும் மோன்ஃபோர்ட் சமூக சேவை அமைப்பு அந்த இயக்கத்தை நடத்துகிறது.
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளாஸா சிங்கப்பூராவில் இடம்பெறவுள்ள கண்காட்சியில் நிபுணர்துகளின் உதவியுடன் துக்கப்படுவோர் உருவாக்கிய 450க்கும் அதிகமான கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பந்துகளும் (படம்) அடங்கும்.
இசை, ஓவியம் வழி துக்கத்தைக் கையாளும் வழிகள் பற்றி ஆலோசகர்கள் பயிலரங்குகளை வழிநடத்துவார்கள். அத்துடன், துக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவுதல், அன்புக்குரியவர் இறப்புக்குப் பின்னர் சட்ட விவகாரங்களைக் கையாள்வது, உள்ளிட்ட தலைப்புகளில் இணையம் வழி உரைகள் இடம்பெறும்.

