சாலைகளில் மூன்று கதவுகளுடைய ஓரடுக்குப் பேருந்துகள் நேற்று முதல் வலம் வரத் தொடங்கின. மின்சாரத்திலேயே முழுமையாக இயங்கும் இந்த முதல் 20 பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு பிடோக், புக்கிட் பாஞ்சாங் வாசிகளுக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் பேருந்துகள் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்துச் சேவைகள் 38, 40 ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும். இச்சேவைகள் பிடோக் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குபவை. அதேபோல் புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிலையத்தில் தொடங்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பேருந்துச் சேவைகளான 176, 976 ஆகியவற்றுக்கும் இந்தப் பேருந்துகள் படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூர் சாலைகளில் வலம்வருவதற்காக ஆணையம் 2018ல் வாங்கியிருந்த 60 மின்சாரப் பேருந்துகளில் இறுதித் தொகுப்பு இப்பேருந்துகள் என்று அறியப்படுகிறது.
நாட்டின் 5,800 பொதுப் பேருந்துகளும் 2040ஆம் ஆண்டுக்குள் மேலும் சுத்தமான எரிசக்தியில் இயங்க வேண்டும் என்ற நீண்டகால இலக்கை அடைவதற்கான ஓர் அங்கம் இந்த மின்சாரப் பேருந்துகள்.
மின்சாரத்தில் முழுமையாக இயங்கும் இந்த 60 பேருந்துகளும் ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 8,000 டன்கள் கரியமில வெளியீட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1,700 கார்கள் வெளியிடும் கரியமிலத்திற்குச் சமம்.
புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த 20 புதிய பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் 'பென்டோகிராஃப்' மின்னூட்டுச் சாதனங்கள், மேலும் துரிதமாக இயங்குபவை. பிடோக், புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிலையங்களில் மேல்பகுதியில் இந்தச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மின்சாரப் பேருந்துகளுக்கு மேல் அமைந்துள்ள ஒரு கருவி, மேலே உள்ள மின்சாரக் கம்பிகளுடன் இணைக்கப்பட்ட பிறகு மின்னூட்டும் பணி தொடங்கும்.
பேருந்து கிடங்குகளில் அமைந்துள்ள வழக்கமான மின்னூட்ட முறையில் மற்ற 40 மின்சாரப் பேருந்துகளுக்கும் மின்னூட்டப்படுகின்றன. இவற்றுக்கு முழுமையாக மின்னூட்ட, இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஆகும்.
புதிய 'பென்டோகிராஃப்' மின்னூட்டுச் சாதனங்கள் அரை மணி நேரத்தில் மின்னூட்டும் ஆற்றல் கொண்டவை. புதிய மின்சாரப் பேருந்துகள் வலம்வரத் தொடங்குவதை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக சேவையில் ஈடுபடுத்தப்படத் தொடங்கியுள்ள மின்சாரப் பேருந்துகளால் நல்ல பலன் தெரிவதாக அவர் கூறினார்.
கரியமில வெளியீடு குறைதல், எண்ணெய்க்கான செலவு மிச்சமாதல், சத்தம் குறைதல் எனப் பலன்களை அவர் பட்டியலிட்டார்.
பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருந்தாலும், இது நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு ஒரு முக்கிய கட்டம் என்றார் திரு ஈஸ்வரன்.