கொவிட்-19 சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பல. இருப்பினும், கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கிடையே தேசிய தின அணிவகுப்பின்போது சிங்கப்பூரர் என்ற உணர்வை வெளிப்படுத்திய பங்கேற்பாளர்களுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தம் நன்றியைத் தெரிவித்தார்.
பலரது மனதைக் கவர்ந்ததுடன் உணர்ச்சிகளைத் தூண்டிய ஒரு கொண்டாட்டமாக, சென்ற சனிக்கிழமை நடந்த நிகழ்வு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றின் பிடியில் இருந்தாலும் மீள்திறனைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு சிங்கப்பூரர்கள் நடைபோட வேண்டும் என்ற நம்பிக்கையை மக்கள் அணிவகுப்பின் மூலம் பெற்றிருப்பர் என்ற தம் விருப்பத்தையும் அதிபர் தெரிவித்தார்.
"ஒன்றுபட்ட மீள்திறன், உறுதி, ஒற்றுமை ஆகியவற்றை இதுபோன்ற சவால்மிக்க தருணங்களின்போதும் சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்துகின்றனர். நமது சிங்கப்பூர் உணர்வுக்கு இதுவே ஓர் உதாரணம். இதை நாம் கொண்டாட வேண்டும். இதை எண்ணி நாம் பெருமைகொள்ள வேண்டும்," என்றார் அவர்.
'எஸ்ஜி எனேபல்', 'மைன்ட்ஸ்' ஆகியவற்றைச் சேர்ந்த கலைஞர்கள் உட்பட அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருடனும் மெய்நிகர் சந்திப்பு ஒன்றை அதிபர் ஹலிமா நேற்று நடத்தினார்.
அணிவகுப்பில் வெவ்வேறு பிரிவினர் இணைந்தது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
"நாம் குறைகளைப் பார்ப்பதில்லை. நிறைகளைப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது அவர்கள் மிகுந்த திறமைசாலிகள்," என்று 'மைன்ட்ஸ்' அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களை அவர் பாராட்டினார்.
சவால்களை எதிர்கொண்டு தங்களின் குடும்பத்துக்காகவும் சமூகத்திற்காகவும் வாழ்க்கை மேம்பட பாடுபட்ட டேசி வைத்திலிங்கம், ஸுபீர் சாயட், டான் கியோக் ஹாக் ஆகிய மூன்று சிங்கப்பூரர்களைப் பற்றியும் அதிபர் பாராட்டிப் பேசினார்.
'மைன்ட்ஸ்' அமைப்பை நிறுவியோரில் திருவாட்டி டேசியும் ஒருவராவார்.
"ஒவ்வோர் ஆண்டும், சிங்கப்பூரர் என்றால் என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்கும் முக்கிய தருணமாக தேசிய தினம் இருந்து வருகிறது. நாம் நினைத்ததில் சிலவற்றை கொவிட்-19 இவ்வாண்டு தடுத்திருக்கலாம். ஆனால் நாம் விடாமல் நடைபோட்டோம்," என்றார் அவர்.

