சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மத்திய நிலையில் பணியாற்றும் வெளிநாட்டு மேலாளர்களுக்குச் சலுகைகள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவற்றால் ஒட்டுமொத்த சம்பளத் தொகுப்புக்காக குறைந்த அளவிலேயே செலவு செய்துள்ளன.
எனினும், வெளிநாட்டவர்களுக்கு ஆக அதிகமான ரொக்க சம்பளம் வழங்கும் நாடுகளில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தரவு, தகவல் வழங்கும் நிறுவனமான 'ஈசிஏ இன்டர்நேஷனல்' நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய நிலையில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கான சராசரி ஊதியத் தொகுப்பு கடந்த ஆண்டு யுஎஸ் $225,171 (305,400 சிங்கப்பூர் வெள்ளி) ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் யுஎஸ் $7,300 குறைவு.
வெளிநாட்டவரை வேலைக்கு அனுப்ப உலகளவில் 17வது செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் உள்ளது.
'ஈசிஏ இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் ஆசியாவுக்கான வட்டார இயக்குநரான திரு லீ குவேன், சிங்கப்பூரின் குறைந்துள்ள வெளிநாட்டினருக்கான சம்பளத் தொகுப்பு ஹாங்காங், தாய்லாந்து போன்ற மற்ற இடங்களிலும் உள்ள சரிவுகளைப் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.
தங்குமிடம் மற்றும் பிற சலுகைகளின் குறைந்த செலவுகள் இச்சரிவுக்குக் காரணம்.
எனினும், 2019ல் தங்கள் சகாக்கள் வாங்கியதைவிட ரொக்க சம்பளத்தில் சுமார் யுஎஸ் $1,000 குறைவாக தற்போது இவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றார் திரு லீ.
"உலகளாவிய அளவில் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் (ஈசிஏ-வின் வசிப்பிட மதிப்பீடுகளின்படி) தரவரிசை முன்னிலையும் இணைந்து, சிங்கப்பூர் வெளிநாட்டினரை இந்த வட்டாரத்துக்கு ஈர்க்கிறது," என்று திரு குவான் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 160 நாடுகளில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இது ஆய்வு செய்தது.

