இணையத்தில் டோட்டோ, 4டி ஆகியவற்றை வாங்க எண்ணுவோர், தாங்கள் செல்லும் 'சிங்கப்பூர் பூல்ஸ்' இணையத்தளம் போலியானதாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிடில் பணம் பறிபோவது நிச்சயம் எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
மோசடிக்காரர்கள் போலி 'சிங்கப்பூர் பூல்ஸ்' இணையத்தளங்களையும் செயலிகளையும் கொண்டு பிறரை ஏமாற்றி வருவதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதைப் பற்றி தெரியாதோர் இந்தப் போலித் தளங்களின் வாயிலாக பந்தயம் பிடித்திருக்கின்றனர். 'சிங்கப்பூர் பூல்ஸ்' நிறுவனத்திற்குப் பதிலாக தங்களின் கட்டணம் வேறு நிறுவனங்களுக்குச் சென்றதை அறிந்த பின்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
sgpools.online, sgpools.app உள்ளிட்டவவை போலியானவை. சரியான இணையத்தளம் https://www.singaporepools.com.sg.
அதிகாரபூர்வமான தளங்களில் இடம்பெற்றாலும் அவை போலியான செயலிகளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரபூர்வ இணையத்தளங்களில் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் தொடர்பில் ஐயங்கள் உள்ளவர்களும் அவசரமாக காவல்துறையினரின் உதவி தேவைப்படுவோரும் 999 என்ற எண்ணை அழைக்கலாம்.

