அனைத்துலக வர்த்தக சந்திப்புகளுக்கான இடமான 'கனெக்ட் அட் சாங்கி' கொவிட்-19 நோயாளிகளுக்கான தங்கும் வசதியாக மாற்றப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்க்கான அறிகுறி இலேசாகவும் அபாயம் குறைவாகவும் உள்ளவர்களை தங்க வைப்பதற்கு இந்த வசதி பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூர் எக்ஸ்போவின் மண்டபங்கள் ஏழிலும் எட்டிலும் இந்த வசதி உள்ளது.
கொவிட்-19 அமைச்சர்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பேசியபோது, அந்நோயாளிகள் மருத்துவமனைகளுக்குப் பதிலாக சமூக பராமரிப்பு வசதிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 97.5 விழுக்காட்டினருக்கு அறிகுறிகள் இல்லாத அல்லது இலேசான அறிகுறிகளைக் கொண்டுள்ள நிலையில் சமூக பராமரிப்பு நிலையங்கள் இவர்கள் குணமடைவதற்கான நல்ல இடங்களாகத் திகழக்கூடும் என்று திரு ஓங் கூறினார்.
கிருமித்தொற்றுக்கு உள்ளானோரில் 40 விழுக்காட்டினர் சமூக பராமரிப்பு வசதிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகமானோர் தடுப்பூசி பெறும் நிலையில் இந்த விகிதம் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு ஓங் கூறினார்.

