குடும்பத்தாருடன் வசித்து வரும் முதியவர்கள், சுற்றியும் ஆட்கள் இருந்தாலும்கூட சமூக அளவில் தனிமையை உணரக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
சமூகத் தொடர்பற்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்த 1,021 மூத்தோரில், குடும்பத்தாருடன் வசிப்போர் 804 பேர். உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வசிப்போர் 70 பேர் மற்றும் தனித்து வாழ்பவர்கள் 147 பேர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
சமூகத் தொடர்பின்மையை உணர்வோரில் பாதிக்கு மேற்பட்டோர், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அணுக யாருமில்லை என்று ஆய்வு கூறியது.
"சமூக ரீதியில் ஓர் இணைப்பு இல்லாத நிலைக்கும் தனித்து வாழ்வதற்கும் பொதுவாக தொடர்பு இருக்கும். ஆனால், சமூகத் தொடர்பின்மையை உணர்ந்த பெரும்பாலானோர், தங்கள் குடும்பத்தாருடன் வாழ்பவர்களாக உள்ளனர்," என்றார் ஆய்வின் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் கோ வூன் புவே.
ஆய்வுக்காக 16,943 மூத்தோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வில் பங்கேற்றோரின் சராசரி வயது 73. இந்த அண்மைய ஆய்வுத் தரவு, அனைத்து இனங்களுக்கும் பொருந்தும் என்றார் பேராசிரியர் கோ. தனியாக வாழ்வோரில், பெண்களைக் காட்டிலும் சமூகத் தொடர்பின்மையை உணரும் சாத்தியம் ஆண்களுக்கு இருமடங்கு என்றும் ஆய்வு கூறுகிறது.
சிங்கப்பூரில் மூப்படையும் சமூகமும் தனித்து வாழும் மூத்தோரும் அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் சமூகத் தொடர்பின்மை மேலும் பெரிய சிக்கலாக உருவெடுக்கும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு நினைவுறுத்தல் என்றார் பேராசிரியர் கோ.

