சிங்கப்பூரின் உற்பத்தி தொடர்ந்து ஜூலை மாதத்தில் வளர்ச்சி கண்டது. வளர்ச்சி விகிதம் மெதுவடைந்திருந்தாலும் ஆண்டு அடிப்படையாக ஜூலையில் 16.3% வளர்ச்சி பதிவாகியிருந்தது. இத்துடன் உற்பத்தி ஒன்பதாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
உயிர்மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, உற்பத்தி சிறிதளவாக 5.8% வளர்ச்சி அடைந்திருந்தது.
மாத அடிப்படையில் ஜூலையில் உற்பத்தி 2.6% குறைந்தது.
உயிர்மருத்துவ உற்பத்தி, 86.6% வளர்ச்சி கண்டது. மருந்துகளின் உற்பத்தி 134.9% அதிகரித்ததால் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவும் 17.4% வளர்ச்சி கண்டது. மருத்துவச் சாதனங்களுக்கான ஏற்றுமதித் தேவை அதிகரித்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.
மொத்தத்தில் உயிர்மருத்துவ உற்பத்திக் குழுமத்தால் ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 12.1% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
போக்குவரத்துப் பொறியியல் பிரிவில் 33.1% வளர்ச்சி பதிவாகியது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நிலவியதால் உற்பத்திப் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு ஜூலையில் கடல் மற்றும் கடல்சார்ந்த பொறியியல் பிரிவில் 52.6% வளர்ச்சி பதிவானது.
கொவிட்-19 கொள்ளைநோயால் அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் விமானத்துறை சார்ந்த பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறைவாக இருந்தன. இவ்வாண்டு அப்பிரிவில் 22.8% வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது.
இதற்கிடையே துல்லியப் பொறியியல் உற்பத்தி 20.3% வளர்ச்சி கண்டது. பொதுப்படையான உற்பத்தி, 11% வளர்ச்சி அடைந்தது. கொவிட்-19 நெருக்கடியால் கடந்த ஆண்டு கட்டுமானம் தொடர்பான பொருட்களுக்கான தேவையும் உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், இவ்வாண்டு இதரத் துறைகளின் உற்பத்தி 57.2% வளர்ச்சி கண்டது.
உணவு, பானம், புகையிலை, அச்சடித்தல் பிரிவுகளில் வளர்ச்சி விகிதம் குறைந்தது. பால் பொருட்கள், பால் மாவு போன்றவற்றின் ஏற்றுமதித் தேவை குறைந்ததால் உற்பத்தியும் குறைந்ததே இதற்குக் காரணமாகும்.

