தெமாசெக் அறநிறுவனத்தின் ஐந்தாவது முகக்கவச விநியோக நடவடிக்கை நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே 100,000க்கும் மேற்பட்டோர் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நண்பகல் வேளைக்குள் முகக்கவசங்கள் தீர்ந்தும் விட்டன.
ஒவ்வொரு குடும்பமும் 50 மருத்துவத் தர அறுவை சிகிச்சை முகக்கவசங்களையும் 25 'என்95' முகக்கவசங்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முகக்கவச விநியோக நடவடிக்கை, குறிப்பிட்ட சில கடைத்தொகுதிகளிலும் பேரங்காடி கிளைகளிலும் அடுத்த மாதம் 26ஆம் தேதிவரை நடைபெறும்.
இதற்கிடையே, ஒரு சில கடைத்தொகுதிகளில் விநியோக நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கிவிட்டனர்.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு வரிசையில் நின்றவர்களிடம் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் அறிவுறுத்தினர்.
விநியோக நேரம் முற்பகல் 11 மணி என்ற போதும் பலர் காலை 9.30 மணிக்கே வந்துவிட்டனர். அவ்வாறு வந்தவர்களைப் பிறகு வருமாறு கடைத்தொகுதிப் பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். 'கியூஆர்' குறியீட்டை வருடி, மெய்நிகர் வரிசையில் இடம்பிடித்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.
முகக்கவசங்களைப் பெற, மக்கள் தங்களது 'எஸ்பி' பயனீட்டுக் கட்டண ரசீதைக் காட்ட வேண்டும். அத்துடன் பைகளும் வழங்கப்படா. அதனால், முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட சிலர், அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கித் தூக்கிச் சென்றனர்.
அந்தந்த இடங்களில் தற்காலிகமாக முகக்கவசங்கள் தீர்ந்துவிட்டாலும், போதுமான இருப்பு உள்ளது என்றும் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள விரைந்திட வேண்டாம் என்றும் தெமாசெக் அறநிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

