உள்ளூர் உணவுப்பொருட்களை விளம்பரப்படுத்த புதிய தளம்
உள்ளூரில் தயாராகும் உணவுப்பொருட்கள், மேலும் பெரிதளவில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக புதிய இணைய வர்த்தகத் தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தேசிய தினத்தன்று கிட்டத்தட்ட 30 வர்த்தகச் சின்னங்களுடன் தொடங்கப்பட்டுள்ள இத்தளம், ஆண்டிறுதிக்குள் 100 வர்த்தகச் சின்னங்களுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது. foodculture.sg என்ற இணையத்தளத்தில் வாடிக்கையாளர்கள் 30 வர்த்தகச் சின்னங்களின் உணவுப்பொருட்களை வாங்க முடியும். இதற்கான விற்பனைப் பங்கு, 'ஃபூட் கல்ச்சர் சிங்கப்பூர்' நிறுவனத்தைப் போய்ச் சேரும்.
வர்த்தக நிறுவனத்தின் பெயரைப் பிரபலமாக்கவும் விற்பனைகளை அதிகரிக்கவும் இந்த இணையத்தளம் உதவியுள்ளதாக 'எஸ்ஓஎஸ் கிச்சன்' நிறுவனர் ஷில்பா ஷர்மா கூறினார். இணையத்தளத்துக்கான நிதியையும் வளங்களையும் 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' வழங்கியுள்ளது.
தொழில்முனைப்பை மாணவரிடையே ஊக்குவிக்க புதிய வளாகம்
புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளோருக்கென ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி (ஆர்பி), புதிய வளாகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த வளாகத்தில் தங்களின் அலுவலகங்களை 14 புதிய நிறுவனங்கள் அமைத்துக்கொண்டுள்ளன. ஆர்பி, மொத்தம் 29 புதிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், தொழில்முனைப்புக்கான கட்டமைப்பு ஒன்றை ஆர்பி உருவாக்கியவாறு மாணவர்கள், மாணவர்கள் அல்லாதோர் என யாவரையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
தொழில்முனைவர்கள், புதுத் தொழில் தொடங்குவோர், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பங்காளிகள் ஆகிய தரப்புகளை இந்தத் திட்டம் ஒருசேரக் கொண்டுவரும் என்பது ஆர்பியின் நோக்கமாகும். திட்டத்தின்கீழ் இணைவோருக்கு வெறும் வழிகாட்டுவதோடு நின்றுவிடாமல், நிறுவனத்தின் முன்மாதிரியை உருவாக்குதல், இணைந்து வேலை செய்தல், வழிகாட்டுதல் மற்றும் நிதித் திட்டங்கள் கொண்ட நிகழ்வுகள் இடம்பெறுதல் போன்றவற்றுக்கு ஆர்பியின் புதிய வளாகம் தகுந்த வசதியை ஏற்படுத்தித் தரும் என்று கூறப்பட்டது.

