செயல்முறைக் கட்டுமான, பராமரிப்புத் துறையை மின்னிலக்கமயமாக்கப் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தங்களின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்தி, செயல்முறைக் கட்டுமான, பராமரிப்புத் துறை எதிர்நோக்கும் சவால்களைக் கையாள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ தொழில்துறை மின்னிலக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் 500 நிறுவனங்களுக்கும் மேல் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30,000க்கும் அதிகமான ஊழியர்களும் பலன் பெறுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன.
ஒன்று மின்னிலக்க முறைகளைப் பயன்படுத்த வகைசெய்வது.
மற்றொன்று ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க உதவுவது.
செயல்முறைக் கட்டுமான, பராமரிப்புத் துறை நிறுவனங்கள், தங்களின் மின்னிலக்க ஆற்றலை ஆராயவும் வளர்ச்சியடைவதற்குத் தேவையான மின்னிலக்கத் தீர்வுகளை அடையாளம் காணவும் இவை கைகொடுக்கும்.
சிங்கப்பூரின் எரிசக்தி, ரசாயன, மருந்துத் துறைகளுக்கு ஆதரவு வழங்குவதில் செயல்முறைக் கட்டுமான, பராமரிப்புத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக மெய்நிகராக நடத்தப்பட்ட இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
கருவிகளைச் சுத்தம் செய்வது, உற்பத்தி முறைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவை சரியாக இயங்குவதையும் உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை செயல்முறைக் கட்டுமான, பராமரிப்புத் துறை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இத்திட்டத்தைப் போல் உணவு உற்பத்தி, தளவாடம் உள்ளிட்ட துறைகளுக்கு உதவ இதுவரை மொத்தம் 19 தொழில்துறை மின்னிலக்கத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

