செய்திக்கொத்து

2 mins read
905f77f6-5354-4883-b7d9-03fda4c39b91
-

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய பெண்ணுக்குச் சிறை

தன்னிடம் வேலை செய்த பணிப்பெண்ணைத் துன்புறுத்திய குற்றத்திற்காக 38 வயது நுர்ஹுதா ஒத்மானுக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த 32 வயது திருவாட்டி நெனி ஜயந்தி கஸ்மாடி முஹாடி என்ற அந்தப் பணிப்பெண் செய்த வேலை தனக்குத் திருப்தி தரும் வகையில் இல்லாததால் நுர்ஹுதா அவரை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்.

மேலும், திருவாட்டி நெனி தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டதால் அவரைத் தோப்புக்காரணம் செய்ய சொல்லியிருக்கிறார்.

மூன்று பெண்களுக்குத் தாயான நுர்ஹுதா, பணிப்பெண்ணைத் தாக்கிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

நெனிக்கு இதுவரை நுர்ஹுதா 4,000 வெள்ளிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.

அடுத்த மாதம் ஆறாம் தேதியிலிருந்து அவர் சிறைத் தண்டனையை நிறைவேற்றுவார்.

'ரிவர்வேல் மால்': விரிசல்களைச் சரிப்படுத்த உத்தரவு

செங்காங்கில் உள்ள 'ரிவர்வேல் மால்' கடைத்தொகுதிக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிசெய்யுமாறு கட்டட, கட்டுமான ஆணையம் கடைத்தொகுதியின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விரிசல்களைப் பொறியாளர் ஒருவரை ஆராயச் சொன்ன பிறகு அந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஆணையம் சொன்னது.

விரிசல்களால் கடைத்தொகுதியின் கட்டமைப்பில் பாதிப்பு ஏதும் ஏற்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக கட்டடத்திற்குக் கீழ் உள்ள பகுதி மூடப்பட்டுள்ளது.

டாக்சி ஓட்டுநரை இழிவுபடுத்திய ஆடவருக்குச் சிறை

டாக்சி ஓட்டுநரை ஆபாச வார்த்தகளாலும் இனரீதியாகவும் இழிவுபடுத்திய ஆடவருக்கு ஒரு வாரம்

10 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொந்தரவு செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் 48 வயது சகாயநாதன் ஆண்டனி ஒப்புக்கொண்டார்.

பொது இடத்தில் மது போதையில் இருந்ததையும் 66 வயது டாக்சி ஓட்டுநரான திரு டான் டேக் ஹொக்கிற்குத் தொந்தரவு அளித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு திரு டானின் டாக்சியில் சென்றபோது அவர் போகவேண்டிய இடத்திற்குச் சுற்றி வளைத்துச் சென்றதாக சகாயநாதன் எண்ணியதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்தது.