கட்டுமான நிறுவனத்திடம் $600 லஞ்சம்: குற்றச்சாட்டு

கட்டுமான நிறுவனத்திடம் $600 லஞ்சம்: குற்றச்சாட்டு

1 mins read
6c6546b5-0459-468e-a2b7-d070e38a29b0
-
Google News Preferred Icon

ஆய்வின்போது கண்டும் காணாமல் இருக்க ஒரு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து $600 லஞ்சம் பெற்றதாகக் கட்டட, கட்டுமான ஆணையத்தின் முன்னாள் ஆய்வுப் பொறியாளர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டான் மிங் லை, 32, என்ற அந்தச் சிங்கப்பூரர்மீது இன்று இரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கட்டட, கட்டுமான ஆணையத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த டான், கடந்த நவம்பர் மாதம் 'டொமைன் டிரேடிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நிறுவனத்தின் பொது மேலாளர் கோ டாக் டான் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

அவ்வேளையில், இயோ சூ காங் வட்டாரத்தில் 69, பெகோனியா டிரைவ் எனும் முகவரியில் அமைந்திருந்த கட்டுமானத்தளத்தை டொமைன் நிறுவனம் நிர்வகித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதே காலகட்டத்தில், ஆய்வின்போது கண்டும் காணாமல் இருப்பதற்காக சின் ஹாக் கியோங் என்ற கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளரிடம் இருந்து லஞ்சம் பெற டான் முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தத் திட்ட மேலாளர் அதற்கு உடன்பட மறுத்ததோடு, கட்டட, கட்டுமான ஆணையத்திடம் புகார் அளித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு $100,000 வரை அபராதம் அல்லது ஐந்தாண்டுவரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.