இன்று முதல் ஆறு சாதனங்களை சுகாதார அமைச்சு அஞ்சல் வழி அனுப்பும்
சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் விரைவில் அஞ்சல் மூலம் ஆறு கொவிட்-19 வேகப் பரிசோதனைக் கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
அந்தக் கருவிகளை சிங்போஸ்ட் வழியாக இன்று முதல் செப்டம்பர் 27 வரை சுகாதார அமைச்சு விநியோகிக்கும்.
கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுப்பதில் மக்கள் இன்னும் பெரும் பணி ஆற்ற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கருவிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்ட நாடாக படிப்படியாக மாறி வருகிறது. இந்தச் சூழலில் தொற்றைச் சமாளிக்க சமூகம் ஆற்றும் பணியின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மக்கள் தங்களைத் தாங்களே பரிசோதனை செய்துகொண்டு தங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது இதில் முக்கியமானது என்பதை அமைச்சு சுட்டியது.
இதனிடையே, கல்வி அமைச்சும் பாலர்பருவ மேம்பாட்டு வாரியமும் இத்தகைய சாதனங்களை இந்த வாரியம் உரிமம் அளித்துள்ள பாலர்பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் விநியோகிக்கும்.
கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், சிறப்பு கல்வித் திட்ட பள்ளிகளின் தொடக்க அல்லது இளநிலை பிரிவு களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்தக் கருவிகள் வழங்கப்படும்.
பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அனுப்பப்படும் கருவிகளுக்கும் மேலாக அவர்களுக்கு இந்தக் கருவிகள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாணவரும் அல்லது ஊழியரும் மூன்று கருவிகளைப் பெறுவார்கள்.
சிங்கப்பூரில் கொவிட்-19 பரிசோதனை முயற்சிகளை வேகப்படுத்துவதற்கான பரந்த அளவிலான உத்தியின் ஒரு பகுதியாக இந்தக் கருவிகள் விநியோகிக்கப்படுகின்றன என்று தெரிவித்த சுகாதார அமைச்சு, வரும் வாரங்களில் கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மேல் தகவல்களை வெளியிடும் என்றும் கூறியது.
அதிக தடுப்பூசி போட்டுள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூர் அதன் முக்கியத்துவத்தைப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்று அமைச்சு விளக்கியது.
இத்தகைய பரிசோதனைக் கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பவை போன்ற விவரங்களை இணையத் தளங்களில் காணலாம்.
சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 79 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இம்மாதம் முடிவதற்குள் 80 விழுக்காட்டினர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் இலக்கு.

