250,000 குழந்தைகளுக்குத்
தலா $200 நிரப்பப்படும்
ஆறு வயதிற்கு உட்பட்ட சிங்கப்பூர் குழந்தைகள் அனைவரின் குழந்தை மேம்பாட்டுக் கணக்குகளிலும் அடுத்த மாத நடுப்பகுதி முதல் $200 நிரப்புத்தொகை செலுத்தப்படும். இதனால் கிட்டத்தட்ட 250,000 குழந்தைகள் பயன் அடைவர். அந்தக் குழந்தையின் அல்லது உடன்பிறந்தோரின் கல்வி, சுகாதாரச் செலவுகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த இயலும்.
பதிவு செய்யப்பட்ட பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெற்ற 'குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்' ஒரு பகுதியாக குழந்தை மேம்பாட்டுக் கணக்குகளில் நிரப்புத்தொகை செலுத்தப்படுகிறது.
குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்கும் நோக்கில் 'குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டம்' அறிவிக்கப்பட்டது.
இந்த நிரப்புத்தொகை குழந்தை மேம்பாட்டுக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுவிடும்.
தங்கள் குழந்தைகளுக்காக இன்னும் குழந்தை மேம்பாட்டுக் கணக்கைத் தொடங்காதவர்கள், நிரப்புத்தொகையைப் பெற அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் கணக்கு தொடங்க வேண்டும். முன்னதாக, கடந்த மே மாதத்தில் ஏழு முதல் 20 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர் பிள்ளைகளின் எடுசேவ் அல்லது உயர்நிலைக்குப் பிந்தைய கல்விக் கணக்கில் $200 நிரப்பப்பட்டது.
செப்டம்பர் 4 முதல் 12 வரை
தமிழ் இளையர் விழா
பள்ளி விடுமுறையில் இளையர்களிடம் தமிழ் மொழி புழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழ் இளையர் விழா செப்டம்பர் 4 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்.
வளர்தமிழ் இயக்கம் ஏற்பாடு செய்யும் இந்த மெய்நிகர் நிகழ்வில் மொத்தம் 12 நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
குடும்பம், பள்ளி, சமூகம் ஆகிய மூன்று அம்சங்களைப் பொறுத்தே தமிழின் துடிப்பான பயன்பாடு இருக்கும். ஆகையால் பிள்ளைகள் அதிக தமிழ் அனுபவத்தைப் பெறும் வகையில் இந்த வாய்ப்பைப் பெற்றோர் பயன்படுத்திக்கொள்வர் என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு.மனோகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸூம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற இணையத் தளங்களில் இடம்பெறும் அந்த நிகழ்ச்சிகள், 35க்கும் குறைந்த வயதுள்ள மாணவர்களையும் இளையர்களையும் ஈர்க்க முனையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழி, தகவல் உருவாக்கம், மொழிபெயர்ப்புப் பயிலரங்குகள், பேச்சுப் போட்டிகள், நகைச்சுவை போன்ற பல வகையான நிகழ்ச்சிகளைப் பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கலாம். விழா பற்றிய மேல் விவரங்களுக்கு வளர்தமிழ் இயக்கத்தின் இணையத்தளத்தை நாடலாம்.
சமூக ஊடகங்களில் வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கமான facebook.com/tamillanguage councilSingapore அல்லது இன்ஸ்டகிராம் பக்கமான @tamillangfestival ஆகிய இணைப்புகளையும் அணுகலாம்.
'ஐவருக்கு அனுமதி அளிப்பது நடைமுறை சாத்தியமானதல்ல'
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் சேர்ந்து சாப்பிட அனுமதிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்று சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெரிவித்துள்ளன.
அந்த இடங்களில் இப்போது இருவர் சேர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போடப்பட்டது இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
குளிரூட்டி வசதி உள்ள உணவகங்களில் ஐந்து பேர் சேர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் இருவருக்குத்தான் அனுமதி உள்ளது. இந்தக் கடைகளை நடத்துவோரின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது என்று மாக்கான்சூத்ரா என்ற தளத்தை நிறுவிய கே எஃப் சீதோ என்பவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்து இருந்தார்.
உணவங்காடி நிலையங்களும் காப்பிக் கடைகளும் திறந்த இடங்களாக இருப்பதையும் சாப்பிடுவோரும் சாப்பாடு வாங்கிச் செல்வோரும் அங்கு வருகிறார்கள் என்பதையும் அவருக்கு அளித்த பதிலில் அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
உணவு, பானக் கடைகளில் அமர்ந்து சாப்பிட யாருக்கும் அனுமதி இல்லை.
இருந்தாலும் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் சாப்பிட இரண்டு பேரை அனுமதிக்கலாம் என்று சலுகை அடிப்படையில் கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு முடிவு செய்துள்ளது என்பதை அந்த அமைப்புகள் சுட்டின.

