சேவைத் தொழில்துறை வருமானம் 2வது காலாண்டில் ஈரிலக்க வளர்ச்சி; 16.6% கூடியது

சேவைத் தொழில்துறை வருமானம் 2வது காலாண்டில் ஈரிலக்க வளர்ச்சி; 16.6% கூடியது

2 mins read
207cb03b-7e83-4757-8bea-a6a721615b15
-

சிங்கப்பூரின் சேவைத் தொழில் துறை, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஈரிலக்க வளர்ச்சி கண்டுள்ளது. அந்தத் துறையின் எல்லா பிரிவுகளுமே அதிக வருவாயைப் பெற்றன.

சேவைத் தொழில்துறையின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 16.6% கூடியது.

முதல் காலாண்டில் வருவாய் 1.5% குறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தகவல்கள் மூலம் இவை தெரியவந்துள்ளன.

மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, குடியிருப்பு, உணவுச் சேவைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. சேவைத் துறையின் பல துறைகளிலும் செயல்திறன் அப்படியும் இப்படியுமாக இருந்தது.

பொழுதுபோக்கு, தனிநபர் சேவைத் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 135% வளர்ந்தது. தகவல் தொடர்புத் துறை வருவாய் 38.2% கூடியது.

அதேவேளையில், சுகாதாரம், சமூகச் சேவைகள் துறை 24.6% அதிக வருவாயை ஈட்டியது.

காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது தகவல் தொடர்புத் துறை வருவாய்தான் ஆக அதிகமாகக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 10.5% ஆக இருந்தது.

போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குத் துறை காலாண்டு அடிப்படையில் 10% அதிகரித்தது.

நிபுணத்துவ, நிர்வாக, ஆதரவு சேவைத் துறைகளும் அதிக வருவாயைக் கண்டன.

விற்றுமுதலைப் பார்க்கையில் பொழுதுபோக்கு, தனிநபர் சேவைத் துறைதான் ஆக அதிக சரிவைக் கண்டது.

இந்தக் குறைவு 8.7% ஆக இருந்தது என்பது புள்ளிவிவரத்துறை தகவல்கள் மூலம் தெரிகிறது.