உட்லண்ட்ஸ் லூப் வட்டாரத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் இருந்து ஏராளமான சட்டவிரோத கடலுணவு மற்றும் மாமிச வகைகளை சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 1,000 கிலோவுக்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட நத்தை சிப்பிகள், இருப்பு வைக்கப்பட்டிருந்த 6,000 கிலோவுக்கும் மேற்பட்ட கடலுணவு மற்றும் மாமிசத் தயாரிப்புகள் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டு உள்ளன.
தொழிற்பேட்டை வட்டாரத்தில் சட்டவிரோதமாக நத்தை சிப்பிகளை பதப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக தனது அதிகாரிகளுக்குக் கடந்த புதன்கிழமை தகவல் கிடைத்ததாக எஸ்எஃப்ஏ நேற்று கூறியது. அதே கட்டட வளாகம் மாமிசம் மற்றும் கடலுணவுத் தயாரிப்புகளை உறைநிலையில் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிய வந்தது.
மொத்தமாக 1,040 கிலோ நத்தை சிப்பிகளும் 6,160 கிலோ கடலுணவு மற்றும் மாமிசத் தயாரிப்புகளும் அந்தக் கட்டட வளாகங்களில் கைப்பற்றப்பட்டன.
அங்கு பதப்படுத்தும் நடவடிக்கைகளையும் விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளையும் உடனடியாக தடை செய்து எஸ்
எஃப்ஏ உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பதப்படுத்தும் நிலையம் மற்றும் கடலுணவு, மாமிச சேமிப்பு நிலையம் போன்றவற்றை சட்டவிரோதமாக நடத்தியதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நபர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.
இதுபோன்ற பணிகள் முறையான உரிமம் பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும் என்றது எஸ்எஃப்ஏ. இதற்கான சட்டத்தை மீறுவோருக்கு $10,000 வரையிலான அபராதம், ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை போன்றவை விதிக்கப்படலாம்.
உரிமம் பெறாத வளாகங்களில் பதப்படுத்தப்படும் அல்லது சேமிக்கப்படும் உணவுப்பொருள்களால் ஆபத்து ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் எஸ்எஃப்ஏ தெரிவித்தது.