கொரோனா கொள்ளைநோய் ஏற்
படுத்தி இருக்கும் உலகளவிலான மாற்றங்களால் உருவாகும் புதிய வாய்ப்புகள் மூலம் சிங்கப்பூர் பயன்பெறும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
உலக நிலவரத்திற்கேற்ப வாய்ப்புகள் அமையும் என குறிப்பிட்ட அவர், மின்னிலக்கமயம்-தொடர்புத்திறன்-புத்தாக்கம் போன்றவற்றின் மீது அதிகரித்திருக்கும் கவனம், விரைவாக வளரும் பசுமைப் பொருளியல், உள்ளூர் நிறுவனங்களை உலகமயமாக்குவதில் காணப்படும் தீவிரம் போன்றவற்றை அதற்கு உதாரணமாகச் சுட்டினார்.
அதேநேரம் உலகப் பொருளியல் சூழல் போட்டிமிக்கதாக மாறி வருகிறது என்றும் திரு கான் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம், விரைவான தொழில் ஒருங்கிணைப்பு, மின்வர்த்தகம் மற்றும் மெய்நிகர் அனுபவங்களில் அதிகரித்து வரும் பயனீட்டாளர் விருப்பம் போன்றவை இந்தப் போட்டித்தன்மையில் அடங்கும் என்றார் அவர்.
"இதுபோன்ற மாற்றங்கள் உலகப் பொருளியல் வளர்ச்சிப் பாதையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். நமக்கான வாய்ப்புகள் உருவாகும்போது அவற்றைப் பயன்படுத்தி கொள்ளைநோயிலிருந்து வலுவாக சிங்கப்பூர் மீட்சியடையும்," என்று வர்த்தக தொழில் அமைச்சின் பொருளியல் கலந்துரையாடலில் திரு கான் தெரிவித்தார்.
இந்நிகழ்வு நேற்று மெய்நிகர்வழி நடத்தப்பட்டது.

