கொவிட்-19 காரணமாக உலகம் முழுவதுமே ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல வேலைகள் இனிமேல் இராது என்ற நிலைகூட ஏற்பட்டு உள்ளது. வேலை பார்த்து பொருள் ஈட்டி வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையில் இருக்கும் லட்சோபலட்சம் மக்கள் இதுவரை தாங்கள் பார்த்திராத புதிய ஓர் உலகை எதிர்நோக்குகிறார்கள்.
இதுவரை பெற்று வந்துள்ள தேர்ச்சிகளும் திறமைகளும் ஆற்றல்களும் தொடர்ந்து ஏற்புடைய நிலையில் இருக்குமா, தொடர்ந்து வேலை பார்க்க அவை போதியவைதானா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் நிலைக்கு உலக ஊழியர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
காபந்து அரசு நிர்வாக முறை- அதாவது மக்களுக்கு வரைமுறை இல்லாத கால அளவுக்கு நிதியையும் உதவியையும் ஆதரவையும் இலவசமாக அளிக்கும் ஒரு முறையைக் கடைப்பிடித்துவரும் பல நாடுகளும் திக்குமுக்காடி திண்டாடுகின்றன.
அந்த முறையைக் கைவிட்டுவிட்டு வேறு வழி யைப் பார்க்கவேண்டிய நிலை பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் தன் மக்களுக்கு ரொக்கமாகக் கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்தும் நாடுகளில் அந்த முறை நன்கு நிலையூன்றிய ஒரு பழக்கமாகிவிடுவதால் மக்கள் எப்போதுமே அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் போக்கிலேயே தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் பெறுபவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் நாட்டின் பொருளியல் உறிஞ்சப்படும் ஒரு நிலை ஏற்படுகிறது. உழைக்கவேண்டும், தேர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு மனநிலைக்கு ஊக்கக் குறைவு ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்த நாடுகளில் பல நாடுகளும் கடைசியில் அந்த முறையைக் கைவிட்டுவிட்டன.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இத்தகைய காபந்து முறை ஒத்துவராத ஒன்று.
இதனால்தான் தன் நாட்டு மக்களில் ஒவ்வொருவரின் சொந்த முயற்சியை அடிப்படை முதலீடாக ஆக்கி அவர்களுக்கு இயன்றவரை உதவும் அணுகு முறையை அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.
காலம் எப்போதுமே மாறுவதால் பொருளியலும் கால ஓட்டத்திற்கு ஏற்ப தானும் உருமாற்றம் அடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிய பொருளியலுக்கு ஏற்ப ஊழியர்களும் மாறிக்கொள்ள வேண்டும் என்பதால் மக்கள் ஆயுள் முழுவதும் தங்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டே வரவேண்டும் என்பதை இடைவிடாமல் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஆதரவு அளித்து தன் மக்கள் நாட்டின் பொருளியலுக்குப் பாதகமாக இல்லை, சாதகமாகவே இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.
பொருளியல் பரிணமிக்கும் நிலையில் எல்லா ஊழியர்களுமே அதற்கு ஏற்ப மாறிக்கொள்ளத்தான்வேண்டும் என்றாலும் இதில் முக்கியமாக பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் ஆகி யோரைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இவர்களில் 20 முதல் 60 வரை வயதுள்ள 9,000 பேரை உள்ளடக்கி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இத்தகைய ஊழியர்கள் பொருளியல் ரீதியில் பல சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். அதுவும் 40க்கும் அதிக வயதுள்ள முதிர்ச்சி பெற்ற ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வைக உள்ளன என்பது அதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இவர்கள் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் செலவைச் சமாளிக்க வேண்டும்; மறுபக்கம் வீட்டில் உள்ள வயதான பெற்றோரைப் பராமரிக்கவேண்டும்; பொதுவாகவே இவர்களுக்கு உடனடிக புதிய வேலை கிடைக்காது; தொழிலாளர் சந்தையில் மீண்டும் சேர்ந்துகொள்ளும்போது அல்லது புதிய தொழில்துறைக்கு மாறும்போது இவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு.
ஆகையால் கொவிட்-19 காரணமாக ஏறக்குறைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றாலும் குறிப்பாக பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் ஆகியோரிடம் கவனம் செலுத்த வேண்டிய ஓர் அவசியம் தேசிய அளவில் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை உணர்ந்து இத்தகைய ஊழியர்களுக்கு ஆதரவாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் குரல்கொடுத்து இருக்கிறது. இவர்கள் புதிய பாணி வேலைகளுக்கு மாறிக்கொள்ளவேண்டிய நிலையில் இருப்பதால், குறிப்பிடத்தக்க அளவுக்கு நிதி உதவி வழங்க வேண்டிய தேவை இருப்பதை தொழிற்சங்க இயக்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
வேலைகளை இழந்து இருக்கும் இத்தகைய ஊழியர்களுக்கு நிதி உதவி அளிக்க தொழிற்சங்க இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது. இவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு, பயிற்சி வாய்ப்புகள் தேவை என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
என்றாலும் பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்களுக்கு நிதி ஆதரவு அளிப்பது என்பது அவ்வளவு எளிமைன ஒரு காரியமாக இருக்காது என்பதையும் தொழிற்சங்க இயக்கம் உணர்ந்து இருக்கிறது. இப்போதைய கொவிட்-19 தொற்று சூழ்நிலை அசாதாரணமான ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில், தொழிலாளர் சந்தையைக் கைகொடுத்து காக்க வேண்டிய ஒரு சூழலை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது. அதேவேளையில், தொடர்ந்து நிதி உதவி அளிப்பது என்பது ஒரு பழக்கமாக போய்விடும். அந்தப் பழக்கம் காரணமாக உழைத்து பாடுபட்டு வேலை தேட வேண்டும் என்ற ஊக்கம் மக்களிடையே குறைந்துவிடும் என் பதையும் அது மனதில் கொள்ள வேண்டி உள்ளது.
ஆகைல் பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் ஆகியோருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் எந்த அளவுக்கு நிதியுதவி அளிப்பது என்பதை முடிவு செய்வதில் அரசாங்கம் பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, எப்போது கொடுப்பது, எந்த அளவுக்குக் கொடுப்பது, எவ்வளவு காலத்திற்குக் கொடுப்பது என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
வேலை இல்லாதவர்களுக்கு நிதி ஆதரவு அளிப்பது என்பது அவர்கள் தங்களுக்கு புதிய வேலையை தேடிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று.
காபந்து அணுகுமுறையைக் கைவிட்டுவிட்டு லாபகரமான முறையில் மக்கள் வேலையில் அமர்ந்து பொருள் ஈட்ட வகை செய்வதே சிங்கப்பூர் ஊழியர் நலன், நல்வாழ்வுக் கொள்கைகளின் மிகமுக்கிய அம்சமாக தொடர்ந்து இருந்து வரவேண்டும்.
ஊழியர்களில் எளிதாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும்போதும் இந்தக் கண்ணோட்டம் அவசியம்.

