பொதுப் பயனீட்டுக் கழகம், டன்னர்ன் ரோட்டின் 450 மீட்டர் பகுதியை உயரமாக்கும். அந்தப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை டன்னர்ன் ரோட்டுப் பகுதியில் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைப் பகுதியை உயரமாக்கும் பணிகள் இந்த ஆண்டு நவம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பது போன்ற விவரங்கள் இன்னமும் துல்லியமாக முடிவு செய்யப்படவில்லை.
இந்தப் பணி தற்காலிக ஏற்பாடாக இடம்பெறுகிறது. புக்கிட் தீமா பகுதியில் இப்போது நடந்து வரும் வடிகால் விரிவாக்க வேலைகள் 2024 முதல் காலாண்டில் முடிவடையும்.
புக்கிட் தீமா கால்வாயின் 900 மீட்டர் பகுதியை அகலமாகவும் ஆழமாகவும் ஆக்கும் இந்த வடிகால் மேம்பாட்டுத் திட்டம் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் என்று கழகம் கூறியது.
இந்த வடிகால் பணி முடிவடையும்போது டன்னர்ன் ரோடு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நிலைமை மேம்பட்டு வெள்ளம் ஏற்படாமல் பாதுகாப்பு மேம்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதி பெய்த கடும் மழை காரணமாக டன்னர்ன் ரோட்டில் சைம் டெர்பி சென்டருக்கும் பிஞ்சாய் பார்க்குக்கும் இடையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அன்று சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 3 மணி நேரம் பெய்த மழை, ஆகஸ்ட் மாதத்திற்கான சராசரி அளவைவிட அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதியும் ஏப்ரல் 17ஆம் தேதியும் பெய்த கடும் மழை காரணமாக டன்னர்ன் ரோட்டில் வெள்ளம் ஏற்பட்டது.
மழை தொடரும் என்பதை உத்தேசித்து, வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்களில் சிலர், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான இடங்களில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிப்பதன் தொடர்பில் பொதுப் பயனீட்டுக் கழகம் தீவிரமாக உதவி வருவதாகவும் ஆலோசனை கூறி வருவதாகவும் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் தட்பவெப்பம் என்ற ஒரு பருவநிலையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தட்பவெப்பம் இந்த மாதம் எதிர்மறை கட்டத்தை எட்டியது. இது வரும் அக்டோபர் வரை நீடிக்கும் என்றும் பிறகு படிப்படியாக வலுவிழந்துவிடும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
இத்தகைய பருவநிலை காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிழக்கு முனையில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு உண்டு.

